கோலாலம்பூர்: கொவிட்-19 கிருமித்தொற்றால் மலேசியாவின் சுகாதார கட்டமைப்பு திணறக்கூடிய நிலைமை ஏற்படும் வாய்ப்புள்ளதாக மலாய் மெயில் செய்தி தெரிவித்தது.
மலேசியாவில் நேற்று 27 பேர் கிருமித்தொற்றால் மாண்டனர். இந்த எண்ணிக்கை நேற்று முன்தினம் மாண்ட 39 பேர் என்பதைவிட குறைவு என்றாலும், அது கிருமி பரவல் தொடங்கியதில் இருந்து இரண்டாவது ஆக அதிக எண்ணிக்கையாகும்.
ஏப்ரல் மாதம் முழுவதும் 249 பேர் கிருமித்தொற்றுக்குப் பலியான கினர். ஆனால் இம்மாதத்தின் முதல் இரண்டு வாரத்திலேயே 282 பேர் மாண்டுவிட்டது அச்சத்தைத் தரும் வகையில் உள்ளது.
அங்கு கடந்த ஜனவரி மாதம் ஆக அதிக அளவாக 289 பேர் மாண்டனர். இம்மாதம் ஏற்கெனவே கிட்டதட்ட அந்த எண்ணிக்கையை நெருங்கிவிட்டது மலேசியா.
இன்னோர் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், கிருமித்தொற்றுக்கு ஆளானவர்களின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது, மலேசியாவில் தீவிர சிகிச்சை பிரிவின் தேவை அதிகரித்து வருவதைக் காட்டுவதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இது கிட்டதட்ட 90 விழுக்காடாக இருந்தது.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து மலேசியாவில் 1,788 பேர் மாண்டனர்.இதில் 471 பேர் சென்ற ஆண்டு உயிரிழந்தவர்கள் ஆவார்கள்.
கிருமித்தொற்றைத் தவிர்ப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு மலேசியர்களை வலியுறுத்தும் சுகாதார இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா, "எந்த நோயாளி வாழ வேண்டும், எந்த நோயாளி உயிரிழக்க வேண்டும் என்பதை மருத்துவ ஊழியர்கள் தேர்வு செய்யும் நிலைமை ஒருபோதும் ஏற்படாது," என்று தான் நம்புவதாக முன்பு கூறியிருந்
தார்.

