யங்கூன்: மியன்மாரின் ராணுவ ஆட்சிக்கு எதிராக முன்பு போராட்டத்தை வழிநடத்திய பௌத்த பிக்குகளில், சில முக்கிய சமயத் தலைவர்கள் ராணுவ ஆட்சியைத் தற்காத்து வரும் நிலையில், அங்குப் பௌத்த பிக்குகளிடையே பிளவு ஏற்பட்டுள்ளது.
சென்ற பிப்ரவரி மாதத்தில் மியன்மார் ஆட்சியாளர் ஆங் சான் சூச்சியும் அவரது முக்கிய அதிகாரிகளும் கைது செய்யப்பட்டார்கள்.
அதைத் தொடர்ந்து, மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடத் தொடங்கினர். மக்களைக் கட்டுப்
படுத்த பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டிற்கு நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். இதனால் ஆர்ப்பாட்டங்கள் வலுக்கத் தொடங்கின.
இந்த ஆர்ப்பாட்டங்களில் பல இளப் பௌத்த பிக்குகள், சமய கட்டளைகளை மீறி அதிகளவில் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக, பாதுகாப்புப் படையினர் மடங்களை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், சுமார் 12 பிக்குகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் கண்காணிப்புக் குழு ஒன்று தெரிவித்துள்ளது.
ஆனால் சமய குழுக்களிடையே ராணுவ ஆட்சியை ஆதரிக்கும் பிரிவினரும் உள்ளதால், தற்போது அவர்களிடையே பிரிவினை ஏற்பட்டுள்ளது.
மெல்ல மெல்ல இஸ்லாமிய ஆக்கிரமிப்பு அச்சுறுத்தலில் இருந்து பௌத்த அடையாளத்தை பாதுகாப்பதாக அவர்கள் ராணுவ ஆட்சியைப் பார்க்கிறார்கள்.
ரோஹிங்கியா முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பைத் தூண்டியதற்காக ஒரு காலத்தில் கைது செய்யப்பட்ட தீவிர தேசியவாத பிக்குவான பர்மவுக்காவும் ஒருவர்.

