மலேசியாவில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் கடுமையான நடமாட்டக் கட்டுப்பாடுகளையும் பாதுகாப்பு ஒழுங்குமுறைகளையும் விதித்துள்ளது. அவற்றை மக்கள் சரிவர பின்பற்றவில்லையெனில் வரும் ஜூன் மாதத்திற்குள் தொற்றுப் பாதிப்புகளின் தினசரி எண்ணிக்கை 8,000ஐத் தாண்டக்கூடும் என்று கூறப்படுகிறது. இது கடந்த வாரத்திற்கு முந்தைய தரவுகளின் அடிப்படையில் 5,000 எனக் கணிக்கப்பட்டது.
மலேசியாவில் தேசிய அளவில் இப்போது கொரோனா தொற்றின் மூன்றாவது அலையைக் கட்டுப்படுத்தும் வகையில் மூன்றாவது முறையாக முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நாட்டில் இன்றைய நிலவரப்படி 4,113 புதிய தொற்றுப் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் மட்டும் வெளிநாட்டில் இருந்து வந்தவர். மற்றவர்கள் அனைவரும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த எண்ணிக்கையைச் சேர்த்து மொத்தம் 462,190 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிலாங்கூரில் 1,269, கோலாலம்பூரில் 306, ஜோகூரில் 335, சரவாக்கில் 533 என தொற்றுப் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
இன்றைய நிலவரப்படி 34 தொற்று மரணங்கள் பதிவாகியுள்ளன. மலேசியாவில் இதுவரை 1,822 பேர் தொற்றுக்குப் பலியாகிவிட்டனர். அங்கு மொத்தம் 41,471 பேர் தொற்றுக்குச் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 482 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 250 பேர் சுவாசக் கருவி உதவிடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். பேராக் மாநிலத்தில்தான் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

