காஸா: இஸ்ரேலிய ராணுவம் காஸா பகுதியில் பாலஸ்தீன போராளிகளுக்கு எதிராக பீரங்கிகளைப் பயன்படுத்தியும் விமானங்கள் மூலமாகவும் தொடர்ச்சியாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இஸ்ரேலின் வர்த்தக மையத்தின் நடுவே பாலஸ்தீனப் போராளிகள் தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதை அடுத்து இஸ்ரேல் தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது.
நேற்று ஐந்தாவது நாளாக தொடர்ந்து போர் நடந்துகொண்டிருக்கிறது. போர்ச்சூழல் தணிவதற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லை என இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸா பகுதியில் ஹமாஸ் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியை நோக்கி இஸ்ரேல் ராணுவம் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது.
ஹமாஸ் போராளிகள் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் படையெடுத்து நாங்கள் தாக்குதல் மேற்கொள்ளவில்லை என்றும் எங்கள் வீரர்கள் இஸ்ரேல் நாட்டு எல்லைக்குள் இருந்துதான் பீரங்கித் தாக்குதல்களை நடத்துகின்றனர் என்று ராணுவப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
காஸாவின் வடக்குப் பகுதியில் வசிக்கும் மக்கள் "இந்த வழியாக எந்தவொரு ராணுவத்தினரும் கடந்துசென்றதற்கான அறிகுறி ஏதுமில்லை. ஆனால் ஏராளமான வான்வழித் தாக்குதல்களும் ஆங்காங்கே குண்டுகள் வெடிக்கும் சத்தமும் கேட்டதாகக் கூறினர்.
இந்நிலையில் "இந்தப் போர்ச்சூழல் தணிவதற்கு அதிக நாட்கள் ஆகக்கூடும்," என்று இஸ்ரேலிய பிரதமர் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார்.
"ஹமாஸ் போராளிக்குழு சக்திவாய்ந்த குழு, அவர்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு முன்னர், அவர்களின் சக்திவாய்ந்த எதிர்ப்பை கடுமையாக போரிட்டு சமாளிக்க வேண்டியிருக்கும்" என்றார்.
இந்நிலையில் இஸ்ரேலில் யூத, அரபிய சமூகத்தினரிடையே கலவரப்போக்கு பரவி வருகிறது.
இந்த இரு சமூகத்தினரும் தத்தம் வழிபாட்டுக் கூடங்களைத் தாக்கி வருவதாகக் கூறப்படுகிறது.
உள்நாட்டு சமூகத்தினரிடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல் போக்கு உள்நாட்டுப் போருக்கு வழிவகுக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் நெட்டன்யாகு எச்சரித்துள்ளார்.
கடந்த நான்கு நாட்களில் காஸாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் இதுவரை 29 குழந்தைகள் உட்பட 109 பேர் கொல்லப்பட்டனர் என்று பாலஸ்தீன மருத்துவ அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். நேற்று முன்தினம் மட்டும் 52 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு விட்டனர் என்றும் அந்த அதிகாரிகள் கூறினர். இஸ்ரேல் தரப்பில் காஸா எல்லைப் பகுதியில் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த இஸ்ரேலிய ராணுவ வீரர், இரண்டு குழந்தைகள் உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. கொல்லப்பட்டவர்களில் இந்தியாவைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவார்.

