செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
d57278a4-cc3e-441c-95d2-460713de774e
-

சீனாவில் மூன்று வாரங்களுக்குப்

பிறகு சமூகத் தொற்று

ஷங்காய்: சீனாவில் சமூகத் தொற்று பதிவாகி மூன்று வாரங்களுக்குப் பிறகு மீண்டும் தலைதூக்கியுள்ளது என்று அந்நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

சீனாவின் அன்ஹுய் மாநிலத்தில் இரண்டு புதிய சமூகத் தொற்று பதிவாகியுள்ளதாக தேசிய சுகாதாரத்துறை ஆணையம் தெரிவித்தது.

கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி சீனாவின் யுனான் மாநிலத்தில் இரண்டு சமூகத் தொற்றுப் பாதிப்புகள் பதிவாகின. அதற்குப் பின் முதன்முதலாக இப்போது சமூகத் தொற்று மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. மியன்மார் நாட்டு எல்லையில் உள்ள யுனான் மாநிலம் கடந்த மார்ச் மாதக் கடைசியில் தொற்றுக் குழுமங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது.

தொற்று பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர், கடந்த மே 1ஆம் தேதி லியோனிங் மாநிலத்தின் துறைமுக நகரான டாலியன் நகரில் இருந்து அன்ஹுய் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டார் என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது. இந்த இருவரும் ஒருவருக்கொருவர் தொடர்பில் இருந்ததாகவும் அந்த செய்தி நிறுவனம் தெரிவித்தது.

மலேசியா: ஜூன் மாதத்திற்குள் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்

கோலாலம்பூர்: மலேசியாவில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் கடுமையான நடமாட்டக் கட்டுப்பாடுகளையும் பாதுகாப்பு ஒழுங்குமுறைகளையும் விதித்துள்ளது. அவற்றை மக்கள் சரிவர பின்பற்றவில்லையெனில் வரும் ஜூன் மாதத்திற்குள் தொற்றுப் பாதிப்புகளின் நாள் எண்ணிக்கை 8,000ஐத் தாண்டக்கூடும் என்று கூறப்படுகிறது. இது கடந்த வாரத்திற்கு முந்தைய தரவுகளின் அடிப்படையில் 5,000 எனக் கணிக்கப்பட்டது. மலேசியாவில் தேசிய அளவில் இப்போது கொரோனா தொற்றின் மூன்றாவது அலையைக் கட்டுப்படுத்தும் வகையில் மூன்றாவது முறையாக முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டில் நேற்றைய நிலவரப்படி 4,113 புதிய தொற்றுப் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் மட்டும் வெளிநாட்டில் இருந்து வந்தவர். மற்றவர்கள் அனைவரும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த எண்ணிக்கையைச் சேர்த்து மொத்தம் 462,190 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிலாங்கூரில் 1,269, கோலாலம்பூரில் 306, ஜோகூரில் 335, சரவாக்கில் 533 என தொற்றுப் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

நேற்றைய நிலவரப்படி 34 தொற்று மரணங்கள் பதிவாகியுள்ளன. மலேசியாவில் இதுவரை 1,822 பேர் தொற்றுக்குப் பலியாகிவிட்டனர். அங்கு மொத்தம் 41,471 பேர் தொற்றுக்குச் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 482 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 250 பேர் சுவாசக் கருவி உதவிடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். பேராக் மாநிலத்தில்தான் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.