காஸா: இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. இரு தரப்பிலும் உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் பதற்றத்தைத் தணிப்பதற்காக அமெரிக்கத் தூதர் ஹாடி அமர் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவுக்கு வந்துள்ளார்.
இஸ்ரேல், பாலஸ்தீனம் மற்றும் ஐநா அதிகாரிகளை அவர் சந்தித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப் படுகிறது.
நேற்று அதிகாலையும் இஸ்ரேலிய ராணுவ விமானங்கள், காஸா மீது மீண்டும் வான்வழித் தாக்குதல்களை நடத்தின.
இதற்கு, பாலஸ்தீனப் போராளிகள் ஏவுகணைகளைப் பாய்ச்சி பதிலடித் தந்தனர்.
கடந்த ஐந்து நாட்களாக இவ்வட்டாரத்தில் பல ஆண்டுகள் இல்லாத அளவில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
இதில் காஸாவில் 32 குழந்தைகள், 21 பெண்கள் உட்பட 132 பேர் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேலில் காஸா எல்லையோரம் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள் உட்பட எட்டுப் பேர் மாண்டனர்.
சனிக்கிழமை இஸ்ரேலிய விமானங்கள் தாக்கியதில் காஸா சிட்டியில் உள்ள முகாம்களில் தங்கியிருந்த எட்டு பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர் என்று பாலஸ்தீன சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித் தார்.
இதையடுத்து இஸ்ரேலின் பியர்ஷெபா நகரை குறி வைத்து ஹமாஸ் போராளிகள் தாக்கினர்.
கடந்த ெவள்ளிக்கிழமை அன்று வன்முறைச் சம்பவங்கள் மேற்கு கரைக்கும் பரவியது.
இதில் பத்துக்கும் மேற்பட்டோர் மாண்டனர், நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர்.
இஸ்ரேலியப் படைகள், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும் ரப்பர் தோட்டக்களால் சுட்டும் தாக்கியதால் பாலஸ்தீனர்கள் அவர்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர்.
இன்று ஐநா பாதுகாப்பு மன்றம் கூடுகிறது.
இவ்வேளையில் அமெரிக்கத் தூதர் அமரின் சமாதானப் பயணம் தொடங்கியுள்ளது.
இவரது பயணம் குறித்து பேசிய இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகம், திரு அமர் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவார் என்று தெரிவித்தது.

