தைப்பே: தைவான் அதன் தலைநகரான தைப்பேயிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கிருமித்தொற்று எச்சரிக்கை நிலையை உயர்த்தியிருக்கிறது.
சமூக அளவில் கிருமித் தொற்றுச் சம்பவங்கள் 180 வரை பதிவானதால் அந்நாட்டு அரசாங்கம் தீவிரக் கட்டுப்பாடுகளை அமல் படுத்தி வருகிறது. இதனால் இரு வாரங்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படும். சமூக ஒன்றுகூடலுக்கும் வரம்பு விதிக்கப்படும்.
அலுவலகங்கள், பள்ளிகள், உணவகங்களை மூட அரசு உத்தரவிடவில்லை. இருந்தாலும் திரையரங்குகள், இதர பொழுதுபோக்குத் தளங்கள் மூடப்படும். குடும்ப உறுப்பினர்கள் ஐவர் மட்டுமே ஒன்று கூட முடியும். வெளியில் பத்து பேர் வரை ஒன்றுகூட அனுமதியுண்டு.
முதல் முறையாக வெளியிடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மதுபானக் கூடங்கள், இரவு கேளிக்கை விடுதிகளுக்கு அனுமதியில்லை.
சுகாதார அமைச்சர் சென் ஷி-சுங், சில இடங்களில் அபாய அளவு கூடியுள்ளதால் எச்சரிக்கை நிலையும் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறினார்.
"இத்தகைய நடவடிக்கை களால்தான் கிருமிப் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே தேவையற்ற சந்திப்புகளையும் பொது நிகழ்ச்சி ளையும் குறைத்துக் கொள்ளப் போவதாக அதிபர் ட்சாய் இங்-வென் அறிவித்துள்ளார்.
சமூகத் தொற்று அதிகரிப்பு பங்குச் சந்தையிலும் பாதிப்பை ஏற்படுத்தியது.
ஆனால் நாட்டின் பொருளியல் அடித்தளம் சிறப்பாக உள்ளது என்று பிரதமர் சு டசெங்-சாங் வலியுறுத்தியுள்ளார்.

