மலேசியாவில் தொற்றுக்கு
ஒரே நாளில் 44 பேர் மரணம்
கோலாலம்பூர்: மலேசியாவில் நேற்று ஒரே நாளில் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட 44 பேர் உயிரிழந்தனர்.
இவர்களில் ஒருவர் வெளிநாட்டவர் என்று சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா டுவிட்டர் பதிவில் தெரிவித்தார். இதனால் மலேசியாவில் கிருமித்தொற்றுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,866க்கு அதிகரித்துள்ளது என்றும் அவர் சொன்னார். இதற்கு முன்பு கடந்த புதன்கிழமை அன்று ஆக அதிகமாக 39 பேர் உயிரிழந்தனர்.
மேலும் ஜோகூர், சிலாங்கூர், கோலாலம்பூர், பினாங்கு, கிளந்தான், நெகிரி செம்பிலான் உள்ளிட்ட பகுதிகளில் 15 புதிய தொற்றுக் குழுமங்கள் உருவாகியிருப்பதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
ஹாங்காங் தொழிலதிபரின்
சொத்து முடக்கம் ஓர் எச்சரிக்கை
தைப்பே: தொழிலதிபர் ஜிம்மி லாய்க்குச் சொந்தமான சொத்துகளை முடக்க ஹாங்காங் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதனை சுட்டிக்காட்டியுள்ள தைவான் அரசாங்கம், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் வர்த்தகம் புரிவது அபாயகரமானது என்பதை இது காட்டுவதாக உள்ளது என்று தெரிவித்தது. கடந்த வெள்ளிக்கிழமை ஜிம்மி லாயின் சொத்துகளும் அவரது நிறுவனத்தின் பங்குகளும் முடக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த 2019ஆம் ஆண்டில் நடைெபற்ற ஜனநாயக ஆதரவுப் போராட்டங்களின்போது சட்டவிரோதக் கூட்டத்தில் பங்கேற்றதாகக் கூறி ஜிம்மி லாய்க்கு 14 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
வாஷிங்டனில் பெட்ரோல் தட்டுப்பாடு
வாஷிங்டன்: இணையத் தாக்குதலால் பெரிய அளவில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவின் தலைநகரமான வாஷிங்டனில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால் கூடிய விரைவில் நிலைமை வழக்க நிலைக்குத் திரும்பும் என்று அதிகாரிகள் உறுதி தெரிவித்துள்ளனர்.

