பீதியில் பொருட்களை வாங்க குவியும் தைவான் மக்கள்
தைப்பே: கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக இரண்டு வாரங்களுக்குக் கட்டுப்பாடுகள் நடப்பில் இருக்கும் என்பதால் தைவான் 'நூடல்ஸ்', கழிவறைத் தாள் போன்ற அத்தியாவசிய பொருட்களை மக்கள் வாங்க குவிகின்றனர்.
தொற்றுநோய் பரவத் தொடங்கியதிலிருந்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை குறைவாகவே இருந்ததால் தைவான் மொத்தமாக முடங்காததால், சில நாட்களாக அதிகரித்து வரும் கிருமித்தொற்று அம்மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. நேற்று அங்கு 206 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் போதுமான பொருட்கள் கையிருப்பு உள்ளதாகவும் மக்கள் பொருட்களை வாங்க அவசரப்பட வேண்டாம் என்றும் தைவான் அதிபரும் பொருளாதார அமைச்சருமான சாய் இங்-வென் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமெரிக்கா: பள்ளிகளில் முகக்கவசம் அணிய வேண்டும்
வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் இரண்டு தவணை தடுப்பூசியையும் போட்டுக் கொண்டவர்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்திருந்தாலும் பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்றும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் உத்தரவிட்டுள்ளது.
இந்தோனீசியாவில் ஒருவர் மரணம்: அஸ்ட்ராஸெனக்கா நிறுத்திவைப்பு
ஜகார்த்தா: இந்தோனீசியாவில் அஸ்ட்ராஸெனக்கா தடுப்பூசி போடப்பட்ட பிறகு மோசமான விளைவுகள் ஏற்பட்டதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து மலட்டுத்தன்மை மற்றும் நச்சுத்தன்மைக்கான சோதனைகளை நடத்துவதற்காக ஒரு குறிப்பிட்ட தொகுதி அஸ்ட்ராஸெனக்கா தடுப்பூசி போடு வதை நிறுத்தி வைத்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது. ஜகார்த்தாவில் 22 வயது இளையர் ஒருவர் அஸ்ட்ராஸெனக்கா தடுப்பூசி போடப்பட்ட அடுத்த நாள் மாண்டதையடுத்து கொவிட்-19 தடுப்பூசியின் விளைவுகளைக் கண்காணிக்கும் தேசிய குழு தனது விசாரணையைத் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செல்ஃபி எடுக்க முயற்சி;
படகு கவிழ்ந்து ஏழு பேர் மரணம்
ஜகார்த்தா: இந்தோனீசிய ஜாவா தீவின் நீர்த்தேக்கம் ஒன்றில் சென்றுகொண்டிருந்த படகில் சுற்றுலா பயணிகள் செல்ஃபி எடுக்க முயன்றபோது படகு கவிழ்ந்து ஏழு பேர் மாண்டனர்.
படகில் பயணம் செய்தவர்களில் 20 பேர் ஒன்றாகச் சேர்ந்து படம் எடுப்பதற்காக ஒட்டுமொத்தமாக திடீரென்று படகின் வலதுபக்கமாக சென்றதாக ஜாவா தலைமை போலிஸ் அதிகாரி சொன்னார். அதிகமானவர்களை ஏற்றிச் சென்றதும் விபத்துக்கு ஒரு காரணம் என்றார் அவர். மூழ்கியவர்களில் 11 பேர் மீட்கப்பட்டனர். இருவரைக் காணவில்லை. ஏழு பேர் மாண்டனர்.

