சிங்கப்பூரில் அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய எல்லைக் கட்டுப்பாடுகளால், பணிப்பெண்களை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகளுக்கும் முகவைகளுக்கும் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கொவிட்-19 தொற்று அபாயம் அதிகம் உள்ள நாடுகளில் இருந்து புதிதாக யாரும் வேலை அனுமதி பெற்று இங்கு வர அனுமதி வழங்கப்படாது என்று மனிதவள அமைச்சு இம்மாதம் 7ஆம் தேதி அறிவித்தது. முன்னதாகவே அனுமதி பெற்று, இந்த மாதம் வரவேண்டியவர்களின் பயணத் தேதிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
அடுத்து இனி எப்போது புதிதாக அனுமதி வழங்கப்படும் என்று தெரியாத நிலையில், பல முகவைகளுக்கு நிதிச் சுமை ஏற்பட்டுள்ளது என்றார் சிங்கப்பூர் வேலைவாய்ப்பு முகவைகள் சங்கத்தின் தலைவர் திருவாட்டி ஜெயப்பிரேமா.
புதிய பணிப்பெண்கள் இல்லை என்பதால் நிறுவனங்கள் அவற்றின் வாடிக்கையாளர்களை இழந்துள்ளன. ஏற்கெனவே தமது சங்கத்தில் உள்ள சுமார் 300 முகவைகளில் 10 விழுக்காட்டு முகவைகள் மூடிவிட்டதாக அவர் கூறினார்.

