பத்து குழந்தைகள் உட்பட 42 பேர் பலி
காஸா/ ஜெருசலம்: இஸ்ரேல் நேற்றும் இடைவிடாமல் காஸா மீது குண்டுகளை வீசி தாக்கியது. ஹமாஸ் போராளிகளும் தங்களால் இயன்ற அளவு இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தினர்.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே இரண்டாவது வாரமாக நேற்று சண்டை தொடர்ந்தது.
இரு தரப்பினரும் போரை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் அழைப்பு விடுத்திருந்தாலும் இஸ்ரேலும் பாலஸ்தீனமும் காதில் வாங்கிக்கொண்டதாகத் தெரியவில்லை.
முக்கிய சாலைகள், பாதுகாப்புக் கட்டடங்கள், போராளிகளின் பயிற்சி முகாம்கள், குடியிருப்புக் கட்டடங்கள் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு இஸ்ரேல் குண்டு களை அடுத்தடுத்து வீசியது. இந்த வெடிச்சத்தம் இரவு முழுவதும் பாலஸ்தீனத்தின் பல பகுதிகளில் எதிரொலித்தது.
இஸ்ரேலிய நகரங்களான பியர்ஷெபா, ஆஷ்கெலோன் மீது நள்ளிரவில் காஸாவிலிருந்து ஏவு கணைகள் பாய்ச்சப்பட்டதால் ஹமாஸ் போராளிகள் பயன்படுத்திய நிலத்தடி சுரங்கம் உட்பட 'பயங்கரவாதிகளின் இலக்குகளை' போர் விமானங்கள் தாக்கியதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியது.
ஹமாஸ் உயர்மட்ட தளபதிகளுக்குச் சொந்தமான ஒன்பது குடியிருப்பு களையும் இஸ்ரேலிய ராணுவம் தரைமட்டமாக்கியது.
காஸா போராளிகள் ஏறக்குறைய 60 ஏவுகணைகளை இஸ்ரேலிய நகரங்கள் மீது பாய்ச்சியதாக இஸ்ரேலிய ராணுவம் குற்றம் சாட்டியது.
இஸ்ரேலின் தாக்குதலில் வடக்கு காஸாவில் உள்ள தொழிற்சாலை தீப்பற்றி எரிந்தது. தீயை அணைக்க பாலஸ்தீன தீ அணைப்பாளர்கள் கடுமையாகப் போராடினர்.
அதிகாலை முழுவதும் இஸ்ரேலின் குண்டு மழை சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. இதனால் காஸா குடியிருப்பாளர்கள் ரொட்டி மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வாங்க கடைகளுக்கு ஓடினர்.
"குண்டு சத்தம் கேட்டுக் கொண்டே இருந்ததால் என்னுடைய குழந்தைகள் இரவு முழுவதும் தூங்க முடியவில்லை," என்று ஐந்து குழந்தைகளுக்குத் தாயான உம் நயிம் தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற சண்ைடயில் இரு தரப்பிலும் ஏற்பட்ட உயிர்ச்சேதம் பற்றி விவரம் தெரியவில்லை.
ஆனால் இதுவரை 58 குழந்தைகள், 34 பெண்கள் உட்பட 197 பேர் கொல்லப்பட்டதாக காஸாவின் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இஸ்ரேலில் இரண்டு குழந்தைகள் உட்பட பத்து பேர் மாண்டுவிட்டதாக இஸ்ரேலிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதற்கிடையே 'ஓஐசி' எனும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு ஞாயிற்றுக்கிழமை அன்று காஸா மீதான 'காட்டுமிராண்டித்தனமான' தாக்குதல்ளை நிறுத்த வேண்டும் என்று அறைகூவல் விடுத்து உள்ளது. பாலஸ்தீனர்களுக்கு எதிராக திட்டமிட்டு குற்றம்சாட்டப்படுவதாக வும் அது கூறியது.

