கொவிட்-19 கிருமி காற்றின் மூலம் பரவும் என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். அதிகாரிகளும் இவ்வாறே நினைக்கிறார்கள் என்பது இப்போது தெரிய வந்துள்ளது.
உலக சுகாதார நிறுவனமும் அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையங்களும் கொரோனா கிருமி காற்றில் பரவக்கூடியது என்ற நெடுநாள் கருத்தை இப்போது ஏற்றுக்கொள்ள தொடங்கி இருக்கின்றன.
அந்தக் கிருமிக்கு காற்றில் பரவக்கூடிய ஆற்றல் இருக்கிறது என்று பல ஆய்வாளர்கள் கடந்த ஓராண்டு காலமாகவே வாதிட்டு வருகிறார்கள்.
இந்த வாதம் இப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டு வருவது பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்துவதாக உள்ளது.
காற்றோட்ட முறைகள் பழுதுபார்க்கப்பட்டு திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்று அறிவியல் அறிஞர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள். இதன் தொடர்பில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் 14 நாடுகளைச் சேர்ந்த 39 அறிவியல் அறிஞர்கள் ஈடுபட்டு இருந்தனர்.
அந்த ஆய்வு முடிவுகள் 'சயின்ஸ்' என்ற அறிவியல் சஞ்சிகையில் இடம்பெற்றுள்ளன. உட்பகுதிகளில் காற்று தூய்மையாக இருந்தால் தொற்றை எதிர்த்துப் போராட மட்டுமின்றி கிருமி பரவுவதைக் கூடுமான வரையில் தடுப்பதற்கும் சாதகமான சூழல் இருக்கும்.
காய்ச்சல், இதர சுவாச கிருமித் தொற்றைத் தூய்மையான காற்று கூடுமான அளவுக்குத் தவிர்த்துவிடும். இத்தகைய தொற்று காரணமாக அமெரிக்காவில் ஆண்டு ஒன்றுக்கு $50 பில்லியனுக்கும் மேற்பட்ட தொகை செலவாவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
அந்தக் கிருமிகளையும் அவை தொடர்பான நோய்களையும் அவற்றால் ஏற்படக்கூடிய உற்பத்தித் திறன் இழப்பையும் தவிர்த்துவிட்டால் அவற்றுக்குச் செலவிட வேண்டிய தொகையைக் கொண்டு கட்டடங்களில் காற்றோட்ட வசதி, தூய்மையான தண்ணீர் வசதியை ஏற்படுத்திவிடலாம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
உள் இடங்களில் காற்றோட்ட முறைகளை மேம்படுத்துவதன் மூலம் கிருமித்தொற்றைத் தடுக்க முடியும் என்ற கருத்து உலகளவில் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று அந்த ஆய்வு கோரிக்கை விடுக்கிறது.

