கோலாலம்பூர்: மலேசியாவில் நேற்று புதிதாக 4,865 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. இவ்வாண்டு ஜனவரிக்குப் பிறகு ஒரே நாளில் பதிவாகி இருக்கும் ஆக அதிகமான எண்ணிக்கை இது.
அதேபோல 47 பேர் தொற்றால் உயிரிழந்துவிட்டனர். தொற்று பரவத் தொடங்கியது முதல் ஒரே நாளில் நிகழ்ந்த ஆக அதிகமான மரணம் இது. இதற்கு முன்னர் ஒரே நாளில் 45 பேர் மாண்டதே ஆக அதிக எண்ணிக்கையாக நீடித்து வந்தது.
புதிதாக தொற்று உறுதி செய்யப் பட்டவர்களையும் சேர்த்து மலேசியாவில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 479,421க்கு அதிகரித்துள்ளது.
சிலாங்கூர் மாநிலத்தில்தான் ஆக அதிகமாக 1,743 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகமாக 18 பேர் உயிரிழந்ததாகவும் சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டார்.
அதற்கு அடுத்த நிலையில் சரவாக் மாநிலத்தில் 512 பேரும் கோலாலம்பூரில் 477 பேரும் ஜோகூரில் 407 பேரும் கிளந்தானில் 406 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மலேசியாவில் ஜனவரி 31ஆம் தேதி ஒரே நாளில் 5,298 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதன் பின்னர் அந்த எண்ணிக்கைப் படிப்படியாகக் குறைந்து வந்தது. இப்போது மீண்டும் உச்சத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
தொற்றுப் பரவல் மீண்டும் வேகமெடுத்திருப்பதால் தடுப்பூசி போடும் நடவடிக்கையைத் தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் அங்கு எழுந்துள்ளது. தனியார் துறையைச் சேர்ந்த முதலாளிகள் தங்களது ஊழியர்களுக்கான தடுப்பூசியை வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்று சில மாநிலங்கள் தெரிவித்து உள்ளன.
ஆயினும் வடக்கு மாநிலமான பினாங்கு கூட்டரசின் சுகாதார அமைச்சுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளது. தனியார் நிறுவனம் ஒன்றிடமிருந்து இரண்டு மில்லியன் முறைக்கான தடுப்பூசியைப் பெறவேண்டும் என்ற தங்களது கோரிக்கையை மறுபரிசீலனை செய்து அனுமதி வழங்க வேண்டும் என்பதே அந்த வேண்டுகோள்.
இது குறித்து மார்ச் 12ஆம் தேதி கடிதம் ஒன்றின் மூலம் அனுமதி கோரியதாகவும் ஆனால் அதற்கு அைமச்சு மறுப்பு தெரிவித்ததாகவும் பினாங்கு முதலமைச்சர் சோ கோன் இயோ நேற்று தெரிவித்தார்.
அதே நேரம் சிலாங்கூர் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு இதுபோன்ற அனுமதி வழங்கப்பட்டு பினாங்கு மட்டும் புறக்கணிக்கப்பட்டதாக அவர் குறைகூறினார்.

