யங்கூன்: பிப்ரவரி மாதம் ஆட்சிக் கவிழ்ப்பில் ராணுவம் ஈடுபட்டது முதல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்திய 800 பேரை மியன்மார் பாதுகாப்புப் படைகள் கொன்றுவிட்டதாக பொதுநல அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
தனக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை ஒடுக்கத் தொடங்கிய ராணுவம், நேற்று முன்தினம் (மே 17) நிலவரப்படி 802 பேரை கொன்று குவித்திருப்பதாக அரசியல் கைதிகளுக்கான ஆதரவு சங்கம் (ஏஏபிபி) தெரிவித்துள்ளது.
"எங்கள் அமைப்பு சரிபார்த்த எண்ணிக்கை இது என்றபோதிலும் உண்மையான மரண எண்ணிக்கை இதைவிடக் கூடுதலாக இருக்கக்கூடும்," என்று இந்த அமைப்பைச் சேர்ந்தோர் செய்தியாளர்களிடம் கூறினர்.
இந்த எண்ணிக்கையில் சின் மாநில நகரங்களிலும் மாண்டலே, யங்கூன் நகரங்களிலும் புதிதாக ஆறு பேர் கொல்லப்பட்டதும் அடங்கும் என ஏஏபிபி கூறியது.
இருப்பினும் மொத்த மரண எண்ணிக்கையை தனிப்பட்ட முறையில் உறுதி செய்ய இயலவில்லை என்றும் ராணுவப் பேச்சாளரின் தொடர்பு கிடைக்கவில்லை என்றும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியது.
தற்போதைய நிலவரப்படி 4,120 பேரை ராணுவம் தடுத்து வைத்துள்ளதாகவும் இவர்களில் 20 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஏஏபிபி தெரிவித்துள்ளது.

