தாய்லாந்தில் இரு மாதக் குழந்தை உள்ளிட்ட 35 பேர் மரணம்
பேங்காக்: தாய்லாந்தில் புதிதாக 35 பேர் மரணமடைந்து விட்டதாக நேற்றுக் காலை அறிவிக்கப்பட்டது. இரு மாதக் குழந்தையும் மாண்டோரில் அடங்கும். அந்நாட்டில் அன்றாடம் பதிவாகும் கொவிட்-19 கிருமித்தொற்று மரண எண்ணிக்கையில் இதுவே ஆக அதிகம். மேலும், புதிதாக 2,473 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் நேற்றைய அறிக்கை குறிப்பிட்டது. இவர்களில் 680 பேர் சிறைக் கைதிகள். புதிய எண்ணிக்கையையும் சேர்த்து அங்கு பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 113,555 ஆக உயர்ந்துவிட்டது. தாய்லாந்தில் தொற்று காரணமாக மாண்டோரின் எண்ணிக்கையும் 649க்கு அதிகரித்துவிட்டது.
இந்தியா, பங்ளாதேஷ் ஊழியருக்கு தலா 1,500 ரிங்கிட் அபராதம்
ஜெம்போல்: லாரியில் பயணம் செய்தபோது தனிமனித இடைவெளியைப் பின்பற்றத் தவறியதற்காக மலேசியாவின் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் 12 வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்தியா, பங்ளாதேஷ் நாடுகளைச் சேர்ந்த அவர்கள் அனைவரும் 25 வயதுக்கும் 47 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று ஜெம்போல் வட்டார தலைமை போலிஸ் அதிகாரி ஹூ சாங் ஹூக் தெரிவித்தார். அவர்கள் சென்ற லாரியை திங்கட்
கிழமை மாலை ஜாலான் ரோம்பின்-பாசிர் புசார் சாலைச்
சந்திப்பில் போலிசார் இடைமறித்துச் சோதனை நடத்தினர். தொழிலாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தபோதிலும் கட்டாய தனிமனித இடைவெளி விதியைக் கடைபிடிக்கவில்லை என்பதால் ஒவ்வொருவருக்கும் 1,500 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாக அவர் கூறினார். மேலும், இது தொடர்பான விசாரணைக்கு உதவும்பொருட்டு இந்தத் தொழிலாளர்களின் முதலாளி அழைக்கப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.
தனியார் நிறுவன ஊழியர்களுக்கு தடுப்பூசி: இந்தோனீசியா தீவிரம்
ஜகார்த்தா: நிறுவனங்களின் நிதி ஆதரவில் ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை இந்தோனீசியா நேற்று தொடங்கியது. அதிக தொழிலாளர்களை உள்ளடக்கிய உணவு தொடர்பான நிறுவனங்கள், பெட்ரோகெமிக்கல் நிறுவனங்கள் போன்றவற்றின் ஊழியர்கள் தங்களுக்கான தடுப்பூசியைப் பெறுவர்.
இது தொடர்பாக நேற்று இணையம் வழியாக உரை நிகழ்த்திய அதிபர் ஜோக்கோ விடோடோ, "நாட்டிலுள்ள எல்லாத் தொழிற்சாலைகளும் தொழிற்பேட்டைகளும் கொவிட்-19 தொற்றிலிருந்து காப்பாற்றப்பட வேண்டும். நமது பொருளியல் வளர்ச்சிக்கு அவை அத்தியாவசிய மானவை. உற்பத்தி சரிந்தால் நமது பொருளியல் வளர்ச்சி கீழ்நோக்கிச் சென்றுவிடும்," என்றார். மேற்கு ஜாவா மாகாணத் தொழிற்பேட்டை ஒன்றிலிருந்து அவர் பேசிய உரை தடுப்பூசித் திட்டம் தொடங்கப்பட்ட 18 இடங்களில் இணையம் வழியாக ஒலிபரப்பானது. இந்தோனீசியா ஜனவரி நடுப்பகுதியில் தடுப்பூசித் திட்டத்தைத் தொடங்கியது.
மீட்சி மீது ஏர்ஏஷியா நம்பிக்கை
கோலாலம்பூர்: வெற்றிகரமான தடுப்பூசித் திட்டம் விமானப் போக்குவரத்துத் துறை விரைவில் மீட்சியடைய உதவும் என்று ஏர்ஏஷியா குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டோனி ஃபெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தடுப்பூசித் திட்டம் தற்போது செயல்படுத்தப்படுகிறது. ஏற்கெனவே பயணத்துறைக்கு வலுவான தேவை உள்ளது. இவை இரண்டும் விமானப் போக்கு வரத்தை அடுத்த சில மாதங்களில் மீட்க உதவும்," என்றார்.

