சிங்கப்பூரில் உருமாறிய கொவிட்-19 கிருமி வகை உருவாகியிருப்பதாக இணையத்தில் வலம் வரும் செய்திகளுக்கு எதிராக 'பொஃமா' எனப்படும் இணையம்வழி பொய்ச்செய்திக்கும் சூழ்ச்சித் திறத்துக்கும் எதிரான பாதுகாப்புச் சட்டத்தை சுகாதார அமைச்சு பயன்படுத்தியுள்ளது.
பொய்ச் செய்தியைத் திருத்தும்படி ஃபேஸ்புக், டுவிட்டர், எஸ்பிஎச் சஞ்சிகைகளுக்குச் சொந்தமான ஹார்ட்வேர்ஸோன் தளம் ஆகியவற்றுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
"சிங்கப்பூரில் புதிதாக உருமாறிய கொவிட்-19 கிருமி வகை உருவாகியிருப்பதாகவும் சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு அது பரவும் அபாயம் இருப்பதாகவும் பல ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் செய்தி வெளியிட்டிருப்பது குறித்து எங்களுக்குத் தெரியும்.
"அண்மைய வாரங்களில் சிங்கப்பூரில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது பி1617 வகை கிருமியாகும். இது இந்தியாவில் உருவானது," என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
சிங்கப்பூரில் புதிய உருமாறிய கொவிட்-19 கிருமி வகை உருவாகியிருப்பதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என்று அமைச்சு கூறியது.
அதுமட்டுமல்லாது, சிறாரின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய கொவிட்-19 வகை கிருமி இருப்பதற்கான ஆதாரமும் இல்லை என்று அது வலியுறுத்தியது.
சிங்கப்பூரில் "புதிய உருமாறிய கொவிட்-19 கிருமி வகை" உருவாகியிருப்பதாகவும் அதன் காரணமாக இந்தியாவில் மூன்றாவது அலை பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் அண்மையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.
சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களுக்குத் தடை விதிக்கும்படி இந்திய அரசுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் அவர் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
திரு கெஜ்ரிவாலின் இந்தக் கருத்துகளை ஹிந்துஸ்தான் டைம்ஸ், என்டிடிவி போன்ற இந்திய ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டன.
திரு கெஜ்ரிவால் கூறியதில் துளியளவுகூட உண்மையில்லை என்றும் சமூக வலைத்தளங்களில் அதுபோன்ற கருத்துகளை அவர் வெளியிட்டது முறையல்ல என்றும் சுகாதார அமைச்சு வருத்தம் தெரிவித்துள்ளது.

