சிட்னி: ஆஸ்திரேலியாவில் வர்த்தக அதிபர்கள் அனைத்துலக எல்லையைத் திறக்குமாறு கோரிக்கை விடுத்து வரும் வேளையில், தடுப்பூசிக் போட்டுக் கொள்வதில் ஆஸ்திரேலிய மக்கள் மந்தமாக இருப்பது குறித்து அந்நாட்டு தலைமை மருத்துவ அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொவிட்-19 கிருமித்தொற்றைக் களைவதில் ஆஸ்திரேலியா வெற்றி கண்டிருப்பதால், அங்கிருப்பவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதைத் தாமதப்படுத்துவது கவலையளிப்பதாக ஆஸ்திரேலிய மருத்துவ முகமை தெரிவித்துள்ளது.
தடுப்பூசி போட்டுக்கொள்ள தயங்குவது கொவிட்-19 விதிமீறல்கள் ஏற்படக்கூடிய ஆபத்தை அதிகரிக்கும் என்று ஆஸ்திரேலிய மருத்துவ முகமை எனும் ஏஎம்ஏ கூறியுள்ளது.
"உருமாறிய கிருமித்தொற்றால் வெளிநாடுகளில் என்ன நடக்கிறது என்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
"மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர், குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது," என்று முகமையின் துணைத் தலைவர் கிறிஸ் மோ ஏபிசி ரேடியோவிடம் கூறினார்.
கிருமித்தொற்று காரணமாக ஆஸ்திரேலியா தனது அனைத்துலக எல்லைகளைச் சென்ற ஆண்டு மார்ச் மாதம் மூடியது. அங்கு இதுவரை 30,000த்திற்கும் குறைவான கிருமித்தொற்று சம்பவங்களே பதிவாகியுள்ளன. 910 பேர் மாண்ட
னர்.
இதனிடையே, அடுத்த ஆண்டு மத்தியில்தான், ஆஸ்திரேலியா தனது அனைத்துலக எல்லையைத் திறக்கும் என்று சில வாரங்களுக்கு முன்பு அரசாங்கம் அறிவித்தது.
ஆனால் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட தொழில் முனைவர்கள் அனைத்துலக எல்லையை விரைவாக திறக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

