தென்சீனக் கடற்பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்: சீனா சாடல்
பெய்ஜிங்: அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்று சட்டவிரோதமாக தென் சீன கடற்பகுதிக்குள் நுழைந்ததாக சீனா கூறியுள்ளது. நேற்று முன்தினம் தைவான் நீரிணையில் காணப்பட்ட அமெரிக்காவின் யுஎஸ்எஸ் கர்டிஸ் வில்பர் என்ற போர்க்கப்பல் பாராசீல் தீவுக்கு அருகிலுள்ள கடற்பகுதிக்குள் அனுமதிஇன்றி நுழைந்ததாகவும் சீனக் கப்பல்களும் விமானங்களும் அதனைப் பின் தொடர்ந்ததாகவும் சீன ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால் அமெரிக்காவோ தனக்கு அதற்கான சுதந்திரம் மற்றும் உரிமை இருப்பதாக கூறியுள்ளது.
மிகப்பெரிய பனிப்பாறை உடைந்தது
பாரிஸ்: அண்டார்டிகாவில், உலகின் மிகப்பெரிய பனிப்பாறை உடைந்து கடலுக்குள் விழுந்ததாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏ-76 என்ற பெயர் கொண்ட பனிப்பாறை வெடல் கடற்பகுதிக்குள் உடைந்து விழுந்து மிதக்கிறது. விஞ்ஞானிகள் இந்த பாறை உடைந்ததைப் பருவ நிலை மாற்றத்தோடு தொடர்புபடுத்தவில்லை, மாறாக இது இயற்கையான நிகழ்வு என்று நம்புகிறார்கள். இந்த பாறை 170 கி.மீ. நீளமும் 25 கி.மீ. அகலமும் கொண்டது.
இந்தியாவில் நிவாரண மையம் அமைக்கும் ஹேரி-மேகன் தம்பதி
லாஸ் ஏஞ்சல்ஸ்: இளவரசர் ஹேரி-மேகன் மெர்கல் தம்பதி நேற்று தங்களது மூன்றாவது திருமண நாளைக் கொண்டாடி
னர். இதனை முன்னிட்டு, இந்தியாவின் மும்பையில் ஒரு சமூக நிவாரண மையத்தைக் கட்டும் திட்டத்தை அவர்கள் அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக இயற்கை பேரழிவுகளின் போது உணவு வழங்கும் பிரபல சமையற்காரர் ஜோஸ் ஆண்ட்ரஸ் நடத்தும் லாப நோக்கமற்ற அரசு சாரா அமைப் பான வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சனுடன் அவர்கள் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
மாலத்தீவு முன்னாள் அதிபரைக் கொல்ல முயற்சி; ஒருவர் கைது
மாலே: மாலத்தீவின் முன்னாள் அதிபர் மொஹமட் நஷீத்தை கொலை செய்ய முயன்ற சந்தேக நபர் ஒருவரை போலிசார் கைது செய்தனர். கடந்த 6ஆம் தேதி நடந்த இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நான்காவது நபர் ஆவார். அவர் வெடிகுண்டு வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளை நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.

