காஸா/ஜெருசலம்: இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரும் காஸாவின் ஹமாஸ் போராளிகளும் கடந்த 11 நாட்களாக கடுமையான போரில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து இஸ்ரேல், காஸா, மேற்குக்கரை ஆகிய பகுதிகளில் அண்மைய ஆண்டுகளில் இல்லாத வகையில் வன்முறைச் சம்பவங்கள் தலைவிரித்தாடின. போரையும் வன்முறையையும் முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், சேதமடைந்த காஸா பகுதிகளை மீட்டெடுக்கவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதியளித்திருந்தார். அவ்வகையில் எகிப்து நாட்டின் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் இஸ்ரேலும் தற்காலிகப் போர் நிறுத்தத்திற்கு இணங்கியுள்ளன.
கடந்த சில நாட்களாக நடந்த போரில் இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது. இந்தத் தாக்குதலில் 232 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.
பாலஸ்தீனர்களின் ஆயிரக்கணக்கான வீடுகளை குண்டுகள் தரைமட்டமாக்கின. அதேபோல் ஹாமாஸ் போராளிகள், இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டனர்.
இந்தத் தாக்குதல்களில் 12 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதோடு நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
இஸ்ரேலிய போர் விமானங்கள் எந்தநேரத்திலும் குண்டு மழை பொழியும் என்ற அச்சத்துடன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பாலஸ்தீனர்கள் உறக்கமின்றி கடந்த 11 நாட்களைக் கடத்தினர்.
ஜெருசலத்தில் உள்ள அல்-அக்ஷா வழிபாட்டுக் கூடத்தில் கடந்த 10ஆம் தேதி இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
இதில் இரு தரப்பிலும் பலர் காயமடைந்தனர். மோதலைக் கட்டுப்படுத்த இஸ்ரேல் போலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் மாண்டனர்.
பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் காஸா முனையில் இருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேலியர்கள் பலர் காயமடைந்தனர்.
ஹமாஸ் அமைப்பின் தொடர் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் காஸா முனைப் பகுதி மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்தது.
இரு தரப்பும் மாறிமாறி நூற்றுக்கணக்கான ராக்கெட் தாக்குதல்களை நடத்தின.
இந்நிலையில் இந்தத் தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்த உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது.
"போர் இன்றைக்கு முடிவுக்கு வருவது என்னவோ உண்மைதான். ஆனால், எங்கள் கைகள் இன்னும் போருக்குத் தயாராகவே உள்ளன.
"இஸ்ரேலுடன் மோதும் எங்கள் எதிர்ப்பாற்றலையும் போர்த் திறன்களையும் தொடர்ந்து நாங்கள் மேம்படுத்துவோம்," என்று ஹமாஸ் அரசியல் பேச்சாளர் திரு எசாத் எல்-ரேஷிக் கூறினார்.

