லண்டன்: பிரிட்டனின் பிபிசி ஒளிபரப்பு நிறுவனம் மோசடி செய்து தமது தாயாரைப் பேட்டி கண்டது என்றும் அந்தப் பேட்டிதான் தமது தாயார் இளவரசி டயானாவுக்கும் தமது தந்தை இளவரசர் சார்லஸுடனான உறவு கெடக் காரணமாக விளங்கியது என்று குற்றம் சாட்டியுள்ளார் இளவரசர் ஹேரி.
பிபிசி செய்தியாளர் மார்டின் பஷிர் மோசடியாக இளவரசி டயானாவைப் பேட்டி கண்டதாக அண்மையில் பிரிட்டனின் ஓய்வுபெற்ற மூத்த நீதிபதி ஜான் டைசன் தலைமையில் நடைபெற்ற விசாரணை கண்டறிந்தது.
மார்டின் பஷிர் அப்பொழுது பிரபலமாகாத செய்தியாளர் என்றும் அவர் இளவரசி டயானாவின் அறிமுகத்தை அவரின் சகோதரர் வழியாகப் பெற்றார் என்றும் கூறப்படுகிறது. பின்னர், இளவரசி டயானாவை பாதுகாப்பு அமைப்புகள் பின்தொடர்ந்து அவரது தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படுவதாகவும் இளவரசி டயானா பற்றிய தகவல்களைச் சேகரிக்க இரு மூத்த அதிகாரிகளுக்குப் பணம் கொடுக்கப்பட்டதாகவும் கூறி அவரை பேட்டி கண்டதாக விசாரணை கண்டறிந்துள்ளது.
இதைத் தொடர்ந்துதான் தற்பொழுது இளவரசர் ஹேரி பிபிசி ஒளிபரப்பு நிறுவனத்துக்கு தமது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
பஷிர் எடுத்த பேட்டியில் இளவரசி டயானா தாம் கள்ள உறவு கொண்டிருப்பதையும் தமது கணவரான இளவரசர் சார்ல்ஸுடனான தமது உறவு சீர்கெட்டிருப்பதையும் ஒப்புக்கொண்டார்.
அவரது இந்தப் பேட்டியை 20 மில்லியனுக்கும் மேலான பிரிட்டிஷ் மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இது பற்றிக் கூறும் இளவரசர் ஹேரி, "மோசடியான முறையில் பெறப்பட்ட அந்த பேட்டியினால்தான் தமது தாயார் இளவரசி டயானா மனந்திறந்து பேசினார்.
"எனது பெற்றோின் உறவு முறை சீர்கெட்டதற்கும் அதனால் பலரும் பாதிக்கப்பட்டதற்கும் அந்தப் பேட்டி பெரும் பங்கு வகித்தது," என்று இளவரசர் ஹேரி தமது மனக்குமுறலை கொட்டித் தீர்த்தார்.

