'ஆங் சான் சூச்சி நலமாக உள்ளார்'

'ஆங் சான் சூச்சி நலமாக உள்ளார்'

2 mins read
822323fb-cc9c-4523-8a3c-9239173d01d7
-

ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பின் மியன்மார் ராணுவத் தலைவரின் முதல் நேர்காணல்

யங்­கூன்: ஆங் சான் சூச்சி வீட்­டில் நல­மாக இருக்­கி­றார் என்­றும் இன்­னும் சில தினங்­களில் நீதி­மன்­றத்­தில் முன்­னி­லை­யா­வார் என்­றும் மியன்­மார் ராணு­வத் தலை­வர் மின் அவுங் லைங் நேற்று கூறி­னார்.

இவ்­வாண்டு பிப்­ர­வரி 1ஆம் தேதி­யன்று நடந்த ஆட்­சிக்­க­விழ்ப்­புக்­குப் பின் அளித்­துள்ள தம் முதல் பேட்­டி­யில் இவ்­வாறு கூறி­யுள்­ளார்.

ஆட்­சிக்­க­விழ்ப்பு நடந்­ததை அடுத்து கல­வ­ரம் ஓயாத நிலை­யில் மியன்­மார் சிக்­கி­யுள்­ளது.

இதற்­கி­டையே, ராணுவ ஆட்­சிக்கு எதி­ராக இயங்­கி­வ­ரும் ஓர் ஆயு­த­மேந்­திய இன­வா­தக் குழு, நேற்று ராணு­வத் தளம் ஒன்­றைத் தாக்­கி­ய­தாக உள்­ளூர் ஊட­கங்­கள் தெரி­வித்­தி­ருந்­தன.

"ஆங் சான் சூச்சி நல­மாக இருக்­கி­றார். அவ­ரது வீட்­டில் ஆரோக்­கி­ய­மாக உள்­ளார். இன்­னும் சில நாட்­களில் நீதி­மன்­றத்­தில் அவர் மீதான வழக்கு விசா­ரணை தொடங்­கும்," என்று மின் அவுங் லைங் காணொ­ளிப் பேட்­டி­யில் குறிப்­பிட்­டார். 75 வயது சூச்­சி­யின் செயல்­தி­றன் பற்றி என்ன நினைக்­கி­றார் என்று பேட்­டி­யில் கேட்­கப்­பட்­ட­போது, "அவ­ரால் முடிந்த அனைத்­தை­யும் முயற்சி செய்து பார்த்­தார்," என்று மின் அவுங் லைங் பதி­ல­ளித்­தார்.

கடந்த நவம்­பர் மாதம் சூச்­சி­யின் கட்சி வெற்­றி­பெற்­றி­ருந்த தேர்­தல், முறை­கே­டாக நடந்­தது என்று அடை­யா­ளங்­கண்­டதை அடுத்து ராணு­வம் ஆட்­சி­யைக் கைப்­பற்­றி­ய­தாக அவர் மீண்­டும் வலி­யு­றுத்­தி­னார்.

இருப்­பி­னும், தேர்­த­லில் மோசடி நடந்­துள்­ளது எனும் ராணு­வத்­தின் கூற்­றைத் தேர்­தல் ஆணை­யம் மறுத்­துள்­ளது.

தேர்­தலை ராணு­வம் ஏற்று நடத்­தும் என்­றும் மக்­க­ளின் விருப்­பத்­திற்கு ஏற்ப அர­சி­யல் அமைப்­பில் மாற்­றம் தேவைப்­படும் அம்­சங்­கள் அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ளன என்­றும் மின் அவுங் லைங் கூறி­னார்.

திங்­கட்­கி­ழ­மை­யன்று சூச்சி நீதி­மன்­றத்­தில் முன்­னி­லை­யா­வார் என்று கூறப்­ப­டு­கிறது. இது­வரை அவர் காணொளி மூல­மா­கவே தோன்­றி­யுள்­ளார். அத்­து­டன் அவ­ரின் வழக்­க­றி­ஞர்­க­ளி­ட­மும் அவர் நேர­டி­யா­கப் பேச அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை என்று கூறப்­ப­டு­கிறது.

நேற்று ராணு­வத் தளம் மீது 'கச்­சின் சுய ஆட்சி ராணு­வம்' மேற்­கொண்ட தாக்­கு­த­லில் அதி­க­மான கரும்­புகை சம்­பவ இடத்­தில் காணப்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

ஆட்­சிக்­க­விழ்ப்பை அடுத்து ராணு­வத்­திற்­கும் கச்­சின் சுய ஆட்சி ராணு­வத்­திற்­கும் இடையே இத்­த­கைய மோதல் நிகழ்ந்து வரு­கிறது.