செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
7d142017-bf91-480c-a553-49139ea8a95e
-

'ஆம்ஸ்டர்டாம் கத்திக்குத்துக்கும் பயங்கரவாதத்திற்கும் தொடர்பில்லை'

ஆம்ஸ்டர்டாம்: மதுக்கூடங்கள், உணவகங்கள் அமைந்துள்ள நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் பகுதியில் வெள்ளிக்கிழமையன்று நடத்த கத்திக்குத்து தாக்குதல்களுக்கும் பயங்கரவாதத்திற்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை என்று டச்சு போலிசார் கூறியுள்ளனர். 29 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆடவர் தாக்கியதில் ஒருவர் பலி என்றும் மேலும் நால்வர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர் என்றும் அறியப்படுகிறது.

வியட்னாம்: மொத்த கொவிட்-19 எண்ணிக்கை 5,000ஐக் கடந்தது

ஹனோய்: மேலும் 52 புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் நாட்டில் பதிவாகியுள்ளதாக வியட்னாம் நேற்று அறிவித்தது. ஐந்து வயதுடைய இரண்டு இந்திய சிறார்களும் இந்த எண்ணிக்கையில் அடங்குவர் என்று கூறப்பட்டது. இரண்டு சிறுவர்களும் ஹனோயை அடைந்ததும் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் வியட்னாமில் மொத்தம் 5,013 பேர் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் நான்காவது கிருமி அலைக்கிடையே எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளும் மருத்துவ ஊழியர்களும் இரவுபகலாக முன்களத்தில் இருந்தவாறு தங்களது பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பேங்காக் கட்டுமான முகாம் தொடர்பான கிருமித்தொற்றுக் குழுமம்

பேங்காக்: தாய்லாந்தில் நேற்று மேலும் 3,052 புதிய கிருமித்தொற்று சம்பவங்களும் 24 உயிரிழப்புகளும் பதிவாகின. மீண்டும் பட்டியலின் முதல் இடத்தில் பேங்காக் இடம்பெற்றிருந்தது. நேற்று அங்கு 1,191 பேருக்குக் கிருமித்தொற்று உறுதியானது. பேங்காக்கில் உள்ள ஒரு கட்டுமான முகாமின் 1,667 ஊழியர்களிடம் கொவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டதில் மே 12ஆம் தேதியன்று 1,060 பேருக்குத் தொற்று உறுதியானது. அதையடுத்து மேலும் 36 பேரிடம் 'பி1617' உருமாறிய கிருமி கண்டறியப்பட்டது. இதுவரை தாய்லாந்தில் 126,118 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொள்ளைநோய் நெருக்கடிக்கிடையே நேப்பாள நாடாளுமன்றம் கலைப்பு

காத்மாண்டு: ஐந்து மாதங்களில் இரண்டாவது முறையாக நேப்பாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. கொரோனா கிருமித்தொற்றுடன் போராடிக்கொண்டிருக்கும் நிலையில் அரசியல் நெருக்கடியும் நேப்பாளத்தில் ஏற்பட்டுள்ளது. நவம்பர் மாதத்தில் புதிதாக தேர்தல் நடைபெறவேண்டும் என்று கூறி நேற்று நேப்பாள அதிபர் திருவாட்டி பித்யா தேவி பந்தாரி உத்தரவிட்டார்.