யங்கூன்: மியன்மாரில் ரானுவ ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்களின் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்ததற்காக 125,000க்கும் அதிகமான பள்ளி ஆசிரியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக மியன்மாரின் ஆசிரியர்கள் சம்மேளனத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
புதிய பள்ளியாண்டு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு இந்த பணியிடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒத்துழையாமை இயக்கத்தின் அங்கமாக சில ஆசிரியர்களும் பெற்றோர்களும் பள்ளிக்குச் செல்லாமல் இருக்கத் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இம்மாதம் ஐந்தாம் தேதி 125,900 பள்ளி ஆசிரியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாகக் குறிப்பிட்ட அதிகாரி தமது விவரங்களைத் தெரிவிக்கவில்லை. ஈராண்டு களுக்கு முன்பு வரையிலான தரவு களின்படி மியன்மாரில் 430,000 பள்ளி ஆசிரியர்கள் இருந்தனர்.
"பள்ளியில் பணிக்கு வரவழைக்கும் நோக்கில் ஆசிரியர்களை அச்சுறுத்தவே இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இத்தனை பேரை பணிநீக்கம் செய்தால் ஒட்டுமொத்த கட்டமைப்பும் நின்று போகும்," என்று குறிப்பிட்ட ஆசிரியருமான அந்த அதிகாரி, தாம் பள்ளிக்குத் திரும்பினால் தன்னை வழக்குகளிலிருந்து விடுவிப்பதாக கூறப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மியன்மாரின் கல்வி அமைச்சு அல்லது ராணுவ ஆட்சியின் பேச்சாளர் போன்றவர்களை இது சம்பந்தமாக தொடர்புகொள்ள முடியவில்லை என ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆசிரியர்களையும் மாணவர்களையும் பள்ளிக்குத் திரும்புமாறு அரசாங்கத்தால் நடத்தப்படும் 'குளோபல் நியூ லைட் ஆஃப் மியன்மார்' செய்தித்தாள் அழைப்பு விடுத்திருந்தது.
19,500 பல்கலைக்கழக ஊழியர்களும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக ஆசிரியர்கள் குழுமம் தெரிவித்தது.
ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் அடுத்த வாரம் பள்ளிகளில் பதிவுகள் தொடங்குகின்றன. ஆனால், பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பப்போவதில்லை என்று சில பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.
அண்மைய ஆர்ப்பாட்டங்களின்போது பாதுகாப்புப் படையினரால் பலர் கொல்லப்பட்டதைச் சுட்டிக்காட்டி, அந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற பல மாணவர்களும் பள்ளிக்குத் திரும்பப்போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளனர். ஜனநாயகம் திரும்பக் கிடைத்த பிறகுதான் பள்ளிக்குச் செல்வேன் என்று 18 வயதான வின் எனும் மாணவர் குறிப்பிட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவித்தது. கடந்த ஆண்டு அனைத்துலக அளவில் 93 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் மியன்மாரின் கல்வித் தரம் 92வது இடத்தில் உள்ளது.
இதற்கிடையே, மியன்மார் பாதுகாப்புப் படையினருக்கும் ஆயுதம்தாங்கிய இனக்குழுக்களுக்கும் இடையே சீனா - மியன்மார் எல்லைப் பகுதிக்கு அருகில் உள்ள மூஸ் நகரத்தில் நேற்று துப்பாக்கிச் சண்டை மூண்டதாகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. அதிகாலை வேளையில் இந்தச் சண்டை நிகழ்ந்ததாக டிவிபி, கிட் திட் மீடியா போன்ற ஊடகங்கள் தெரிவித்தன. துப்பாக்கிக் குண்டுகள் துளைத்த பொதுமக்கள் வாகனங்களின் படங்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்டன. சம்பவத்தில் யாரும் உயிரிழந்தது குறித்த தகவல் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

