புத்ராஜெயா: மலேசியாவில் உள்ள கடைத்தொகுதிகள் உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக 2 மணிநேரம் வரை இருக்கலாம் எனவும் நாளை முதல் இது நடப்புக்கு வருவதாகவும் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாடிக்கையாளர் விவகார அமைச்சர் அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்துள்ளார்.
மூத்த தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அறிவித்த அதிக கட்டுப்பாடுகளுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை 3.0 செயற்பாட்டு நடைமுறைகளில் இதுவும் அடங்கும் என்றார் அவர்.
அனைத்து சில்லறை, மொத்த, விநியோக வளாகங்களும் காலை 8 முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. மருந்தகம், சில தனிநபர் பராமரிப்பு நிலையங்கள் போன்றவை காலை 8 முதல் இரவு 10 மணி வரை செயல்படலாம்.
அத்தியாவசியத் தேவைகளுக்கான பொருள்கள் போதிய அளவுக்கு கிடைக்கும் என்பதால் யாரும் பயந்து பொருள்களை வாங்கிக் குவிக்கத் தேவையில்லை என்று குறிப்பிட்ட திரு நந்தா, கடைகளின் அளவைப் பொறுத்து எந்தவொரு குறிப்பிட்ட நேரத்திலும் அதற்குள் இருக்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அனைத்து கடைகளிலும் 60% வரை ஊழியர்கள் பணியில் இருக்கலாம். அதிக அபாயம் மிக்க பகுதியாக சுகாதார அமைச்சால் கணிக்கப்படும் கடைகள் துப்புரவுப்படுத்துவதற்காக உடனடியாக மூன்று நாள்களுக்கு மூடப்படும் என்றார் அவர்.
மலேசியாவில் புதிய உச்சமாக நேற்று 6,976 பேருக்கு புதிதாக கிருமித்தொற்று பதிவானது. அங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 512,091 ஆனது. சிலாங்கூரில் ஆக அதிகமாக 2,235 பேருக்கு தொற்று பதிவானது. சரவாக்கில் 553 பேருக்கும் ஜோகூரில் 549 பேருக்கும் பெர்லிசில் 8 பேருக்கும் புத்ராஜெயா மத்திய வட்டாரத்தில் 30 பேருக்கும் லபுவான் மத்திய வட்டாரத்தில் 37 பேருக்கும் தொற்று உறுதியானது.

