செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
dacabb2c-5781-4f7e-b34d-1580d91b4589
-

ஆஸ்திரேலியாவுக்கு 2021க்குள் போதிய அளவு ஃபைசர் தடுப்பூசி

கேன்பரா: ஆஸ்திரேலியர்கள் அனைவருக்கும் இவ்வாண்டு இறுதிக்குள் போடுவதற்குத் தேவையான அளவுக்கு ஃபைசர் தடுப்பூசிகள் கிடைக்கும் என அரசாங்கம் உறுதி அளித்திருப்பதாக சன் ஹெரால்டு செய்தித்தாள் குறிப்பிட்டது. அக்டோபர் முதல் வாரத்துக்கு 2 மில்லியன் என்ற அளவில் தடுப்பூசிகள் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அதன் மூலம் இவ்வாண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போட முடியும் என்றும் ஆஸ்திரேலிய மருத்துவச் சங்கம் குறிப்பிட்டது. ஜூன் மாத இறுதிக்குள் 4.5 மில்லியன் ஃபைசர் தடுப்பூசிகள் கிடைக்கும் என்றும் 3, 4ஆம் காலாண்டுகளில் 7 மில்லியன் தடுப்பூசிகள் கிடைக்கும் என்று எதிர்பார்பார்ப்பதாகவும் சுகாதார அமைச்சர் கிரெக் ஹன்ட் கூறியதாக அந்த ஊடகம் செய்தி வெளியிட்டது.

தென்கொரியாவில் தடுப்பூசி

தயாரிக்கும் மொடர்னா, நோவாவேக்ஸ்

சோல்: அமெரிக்கத் தடுப்பூசிகளை விரைந்து, அதிக எண்ணிக்கையில் பெறுவதன் தொடர்பில் மிகுந்த அழுத்தத்தில் இருக்கும் தென்கொரியாவில் தங்களது தடுப்பூசிகளைத் தயாரிக்க மொடர்னா, நோவாவேக்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் ஆகியோருக்கு இடையே கொவிட்-19 தடுப்பூசி தொடர்பில் ஏற்பட்ட விரிவான பங்காளித்துவத்தின் அடிப்படையில் 550,000 தென்கொரிய படைவீரர்களுக்கு அமெரிக்கா தடுப்பூசிகளை வழங்கும். மொடர்னா தடுப்பூசியை பயன்படுத்த தென்கொரியா கடந்த வெள்ளிக்கிழமை அனுமதித்தது. தென்கொரிய நிறுவனமான எஸ்கே பயோசன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து அங்கு தடுப்பூசி தயாரித்து வரும் நோவாவேக்ஸ் நிறுவனம் அந்தத் தயாரிப்பை விரிவுபடுத்துவதாக நேற்று முன்தினம் அறிவித்தது.

வியட்னாம்: 69 மி. மக்கள் வாக்களிப்பு

ஹனோய்: வியட்னாமில் புதிதாக ஏற்பட்டிருக்கும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் திணறிவரும் வேளையில் 69 மில்லியன் வியட்னாமியர்கள் நேற்று வாக்களித்தனர். நாடாளுமன்ற, மக்கள் மன்ற பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க இந்தத் தேர்தல் நடத்தப்பட்டது. தொற்றுப் பரவலைத் தடுக்க வாக்களிப்பு நிலையங்களில் கடும் சமூக இடைவெளி நடைமுறைப்படுத்தப்பட்டது. 20 நாள்களில் வெளியாகும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளால் அரசாங்கக் கொள்கைகளில் மாற்றம் இருக்காது என்று கூறப்படுகிறது.

உத்திபூர்வ பேச்சுவார்த்தைக்காக ரஷ்யா செல்லும் சீன பேராளர்

பெய்ஜிங்: சீனாவின் முக்கிய பேராளர்களில் ஒருவரான யாங் ஜியெச்சி, இன்று தொடங்கும் இரு நாடுகளுக்கு இடையிலான 16வது உத்திபூர்வ மற்றும் பாதுகாப்பு ஆலோசனைக்காக ரஷ்யா செல்வதாக சீன வெளியுறவு அமைச்சு நேற்று தெரிவித்தது. கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு இயக்குநரான திரு யாங், 27ஆம் தேதி வரை ரஷ்யாவில் இருப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

'தாக்குதல்கள் விரிவுபடுத்தப்படும்'

துபாய்: ஹூதி ராணுவ அதிகாரிகள் மீது அமெரிக்கா விதித்த தடைகளை நிராகரித்த ஏமனின் ஈரான் சார்பு ஹூதி அமைப்பு, தாக்குதல்களை வம்பிழுக்கும் பிற நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளது. அந்தக் குழு அமைதிக்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என வாஷிங்டன் அந்தக் குழுவைக் கேட்டுக்கொண்டதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. போர் நிறுத்த உடன்பாட்டை எட்டுமாறு ஏமனுக்கான அமெரிக்க சிறப்பு தூதர் வலியுறுத்திய நிலையில் ஏமனின் மாரிப் வட்டாரத்தைக் கைப்பற்றியதற்காக இரண்டு ஹூதி ராணுவ அதிகாரிகள் மீது அமெரிக்கா கடந்த வியாழக்கிழமை தடைகளை விதித்தது.