சமூகப் பராமரிப்பு வசிப்பிடங்களில் தயார்நிலையில் 2,400 படுக்கைகள்

சமூகப் பராமரிப்பு வசிப்பிடங்களில் தயார்நிலையில் 2,400 படுக்கைகள்

1 mins read
5ea37009-6d3f-485b-99e5-de40198b3e0a
டி'ரிசார்ட் என்டியுசி, துவாஸ் சௌத், பிரைட் விஷன் மருத்துவமனை ஆகியவையே அம்மூன்று சமூகப் பராமரிப்பு வசிப்பிடங்கள். படங்கள்: சாவ்பாவ் -

அண்மைய வாரங்களாக சமூகத்தில் கொவிட்-19 பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து, கொரோனா நோயாளிகளைத் தனிமைப்படுத்தி, கவனித்துக்கொள்வதற்காக சமூகப் பராமரிப்பு வசிப்பிடங்களில் படுக்கைகள் தயார்ப்படுத்தப்பட்டு வருகின்றன.

அத்தகைய மூன்று இடங்களில் இப்போதைக்கு 2,400 நோயாளிகளைத் தங்க வைக்க முடியும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

டி'ரிசார்ட் என்டியுசி, துவாஸ் சௌத், பிரைட் விஷன் மருத்துவமனை ஆகியவையே அம்மூன்று சமூகப் பராமரிப்பு வசிப்பிடங்கள். கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட, அதே வேளையில் இலேசான அறிகுறிகளும் குறைந்த அபாயமும் இருப்போர் அந்த இடங்களில் தங்க வைக்கப்படுவர்.

நேற்றைய நிலவரப்படி, 268 பேர் அவ்விடங்களில் தங்க வைக்கப்பட்டு, கவனித்துக்கொள்ளப்படுகின்றனர். அதாவது, அவற்றின் கொள்ளளவில் இப்போது கிட்டத்தட்ட 10% நிரம்பியுள்ளது.

இருப்பினும், சமூகப் பராமரிப்பு வசிப்பிடக் கொள்ளளவை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்படும் பட்சத்தில், முன்னெச்சரிக்கையாக முன்னாள் அங் மோ கியோ தொழில்நுட்பக் கல்விக் கழகம், லோயாங் அரசாங்க ஊழியர் மனமகிழ் மன்றம் ஆகிய இடங்களில் உள்ள சமூகப் பராமரிப்பு வசிப்பிடங்களையும் அரசாங்கம் தயார்ப்படுத்தி வருகிறது. அவ்விரு இடங்களில் மேலும் 1,700 பேரைத் தங்க வைக்க முடியும் என அமைச்சு தெரிவித்தது.

தேவைக்கும் உள்ளூர் நிலைமைக்கும் கொள்ளளவைக் கூட்டவும் குறைக்கவும் ஏதுவாக ஒவ்வொரு சமூகப் பராமரிப்பு வசிப்பிடமும் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டது.

"உள்ளூர் நிலவரத்தையும் தேவைகளையும் தொடர்ந்து மறுஆய்வு செய்து, அதற்கேற்றபடி சமூகப் பராமரிப்பு வசிப்பிடங்களின் கொள்ளளவு மாற்றியமைக்கப்படும்," என்று அமைச்சு கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
கிருமித்தொற்று