ஒசாகா: கொரோனா தொற்று சம்பவங்கள் வேகமாக அதிகரித்து வரும் ஜப்பானின் ஒசாகா நகரத்தில் மருத்துவமனை படுக்கைகள், சுவாச உதவி கருவிகள் போன்றவற்றுக்குப் பற்றாக்குறை நிலவுவதாக கூறும் மருத்துவர்கள், சுகாதார அமைப்பு நெருக்கடி நிலைக்குத் தள்ளப்படும் என எச்சரித்துள்ளனர்.
4வது அலையில் ஒசாகாவில் சீக்கிரமாகவே மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாகவும் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதைத் தவிர்க்குமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இன்னும் இரண்டு மாதங்களில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தவுள்ள நிலையில், பொது மக்களிடையேயும் அதற்கு எதிர்ப்பு உள்ளதால், பார்வையாளர்கள் இல்லாமல் போட்டிகளை நடத்துவது குறித்தும் ஏற்பாட்டுக் குழு பரிசீலித்து வருகிறது.
இதற்கிடையே, ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்பு பெரும்பாலான மூத்த குடிமக்களுக்குத் தடுப்பூசி போடும் நோக்கில், நேற்று இரண்டு பெரிய அளவிலான தடுப்பூசி மையங்களைத் திறந்துள்ளது ஜப்பான். ஜப்பானில் மருத்துவ ஊழியர்களில் பாதி பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

