மெல்பர்னில் நால்வருக்கு தொற்று
மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு, நேற்று நான்கு கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகின. இவை எங்கிருந்து பரவின என்பதை கண்டறிய ஆஸ்திரேலிய அதிகாரிகள் தீவிரமாக முயன்று வருகின்றனர். மெல்பர்னின் வடக்கு புறநகரில் உள்ள இரண்டு வீடுகளில் உள்ள நெருங்கிய குடும்ப உறுப்பினர்
களிடம் கண்டறியப்பட்டதாக விக்டோரியா மாநில சுகாதார அமைச்சர் சொன்னார்.
115,000 சுகாதார ஊழியர்கள்மரணம்
ஜெனிவா: கொவிட்-19 பரவத் தொடங்கியதிலிருந்து சுமார் 115,000 சுகாதார ஊழியர்கள் கிருமித்தொற்றுக்குப் பலியாகிவிட்டதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
சுகாதார அமைப்பின் ஆண்டு மாநாட்டை நேற்று தொடங்கி வைத்து பேசிய அதன் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் "ஏறக்குறைய 18 மாதங்களாக, உலகம் முழுவதும் சுகாதார ஊழியர்கள் வாழ்வுக்கும் மரணத்திற்கும் இடையில் தவிக்கிறார்கள்," என்றார்.
வரும் செப்டம்பர் மாதத்திற்குள் ஒவ்வொரு நாட்டிலும்
10 விழுக்காட்டு மக்கள் தடுப்பூசி போடுவதை உறுதி செய்யும் முயற்சிக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
பெலருஸை சாடும் ஐரோப்பிய ஒன்றியம்
மெல்பர்ன்: நாடு கடத்தப்பட்ட செய்தியாளர் ஒருவரைக் கைது செய்வதற்காக பொய் கூறி விமானத்தை பெலருஸில் தரையிறக்கியதற்காக அந்நாட்டு அதிபர் லூகாஷென்கோவைச் சாடும் ஐரோப்பிய நாடுகள், பெலருஸ் மீது தடை விதிப்பது குறித்தும் பரிசீலிக்கின்றன.
கிரீஸ் தலைநகர் ஏதன்ஸிலிருந்து லித்துவேனியா சென்றுகொண்டிருந்த ரையன்ஏர் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகப் பொய் கூறி, தரையிறக்கி அதிலிருந்த செய்தி
யாளர் ரோமன் ப்ரோட்டாசேவிச் கைது செய்யப்பட்டார். ெலருஸ் அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களைத் தூண்டி
விட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
ஃபிளாய்ட் மரணம்: ஓராண்டு நினைவு
மின்னியபோலிஸ்: வெள்ளை போலிஸ்காரர் ஒருவரால்
கறுப்பின ஆடவர் ஜார்ஜ் ஃபிளாய்ட் கொலை செய்யப்பட்ட முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள், உறவினர்கள் நேற்று அணிவகுத்துச் சென்றனர். இதில் சுமார் 1,500 பேர் கலந்துகொண்டனர்.
கடந்த ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி 46 வயதான ஃபிளாய்டை, டெரெக் சாவின் என்னும் போலிஸ்காரர் ஒன்பது நிமிடங்களுக்கும் மேலாக கழுத்தில் கால் முட்டியை வைத்து அழுத்தியதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
1எம்டிபி விசாரணை ஒத்திவைப்பு
கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், 1எம்டிபி வழக்கின் விசாரணையை உயர் நீதிமன்றம் நேற்று ஒத்திவைத்தது. கடந்த வியாழக் கிழமை கண் அறுவை சிகிச்சை செய்த பின்னர் நஜிப் உடல்நலக்குறைவு விடுப்பில் உள்ளதாக தலைமை வழக்கறிஞர் முகமது ஷாஃபி அப்துல்லா தெரிவித்ததையடுத்து, நீதிபதி கோலின் லாரன்ஸ் செகுவேரா விசாரணையை ஒத்திவைத்தார்.

