மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரான மெல்பர்னில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் நேற்று மீண்டும் அமல்
படுத்தப்பட்டன.
புதிய தொற்றுச் சம்பவங்கள் கிளம்பியதைத் தொடர்ந்து பொதுமக்கள் ஒன்றுகூடுவதற்கான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்நகரில் திங்கட்கிழமை புதிதாக நால்வருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த எண்ணிக்கை நேற்று ஐந்தாக உயர்ந்தது.
புதிய கட்டுப்பாடுகள் சிங்கப்பூர் நேரப்படி நேற்று மாலை 4 மணியளவில் நடப்புக்கு வந்தன. அதன்படி ஐந்து பேருக்கு மேல் ஒன்றுகூடக் கூடாது. அதேபோல பொதுச் சந்திப்புகளில் 30 பேருக்கு மேல் இருக்கக்கூடாது என்பதோடு முகக்கவசம் மறுபடியும் கட்டாயமாகிறது.
ஜூன் 4 வரை இந்தக் கட்டுப்பாடுகள் நடப்பில் இருக்கும். புதிய தொற்றுகளைத் தொடர்ந்து கட்டுப்பாடுகளை மறுபடியும் அறிமுகம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக விக்டோரியா மாநில இடைக்கால முதல்வர் ஜேம்ஸ் மெர்லினோ நேற்று மெல்பர்னில் செய்தியாளர்களிடம் கூறினார்.
நான்கு தொற்றுகள் உறுதி செய்யப்பட்ட நிலையில் ஐந்தாவது நபருக்குத் தொற்று ஏற்பட்டதை நேற்று திரு மெர்லினோ உறுதிப்
படுத்தினார். இந்த ஐவருக்கும் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர் மூலம் தொற்று பரவியதா என்பதை அதிகாரிகள் இன்னும் உறுதி செய்யவில்லை.
விக்டோரியா மாநிலத்தில் கிட்டத்தட்ட மூன்று மாத காலமாக ஒரு தொற்றுக்கூட பதிவாகாத நிலையில் அம்மாநில மக்கள் நிம்மதியை அனுபவித்து வந்தனர்.
கடந்த ஆண்டின் பிற்பகுதியில் ஆஸ்திரேலியாவில் இரண்டாம் கட்ட கிருமிப் பரவல் தொடங்கிய போது விக்டோரியா மாநிலம்தான் மோசமாகப் பாதிக்கப்பட்டது.
நாடு முழுவதும் பதிவான மொத்த கிருமித்தொற்றுச் சம்பவங்களில் 70 விழுக்காடும் மொத்த மரணங்களில் 90 விழுக்காடும் அந்த மாநிலத்தில்தான் பதிவாயின. அதனைத் தொடர்ந்து உலகின் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பகுதிகளின் பட்டியலில் விக்டோரியாவும் இடம்
பிடித்தது.

