ஹாங்காங்: எதிர்பார்த்த அளவுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் முன்வராததாலும் தடுப்பூசிகளின் காலாவதி நாள் நெருங்குவதாலும் ஹாங்காங்கில் பல மில்லியன் முறை போடக்கூடிய தடுப்பூசி மருந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இத்தகவல் நேற்று அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சுமார் 7.5 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட ஹாங்காங்கில் தேவைக்கு அதிகமான தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன.
இருப்பினும் அதைப் போட்டுக்கொள்ள மக்களிடம் பெரிய அளவிலான ஆர்வம் காணப்படவில்லை. அரசாங்கம் மீதான அவநம்பிக்கை, இணையத்தில் வெளியாகும் தவறான தகவல்கள் போன்றவை அதற்கு முக்கிய காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.
அதனால் தடுப்பூசி நடவடிக்கையில் சுணக்கம் காணப்படுகிறது. இந்நிலையில், அரசாங்கத்தின் தடுப்பூசித்திட்ட பணிக்குழுவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் நேற்று ஒரு தகவலை வெளியிட்டார். முதற்கட்டமாக வரவழைக்கப்பட்ட ஃபைசர்- பயோஎன்டெக் தடுப்பூசிகளின் காலாவதி நாள் நெருங்குகிறது என்றும் இன்னும் மூன்று மாத காலத்திற்கே அவை தாக்குப்பிடிக்கும் என்றும் ஹாங்காங் மக்கள் அதற்குள் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தாமஸ் சாங் எனப்படும் அந்த அதிகாரி கூறினார்.
சுகாதாரப் பாதுகாப்பு நிலையத்தின் முன்னாள் கட்டுப்பாட்டு அதிகாரியான இவர் நேற்று ஆர்டிஹெச்கே வானொலியில் பேசும்போது, "செம்படம்பர் மாதத்திற்குப் பின்னர் காலாவதியாகும் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட முடியாத நிலை ஏற்பட்டுவிடும். சமூகத் தடுப்பூசி நிலையங்களில் இருந்து அவை அகற்றப்பட்டுவிடும்," என்றார்.
ஃபைசர் தடுப்பூசிகளையும் சீனாவின் சினோவேக் தடுப்பூசிகளையும் தேவைக்கு அதிகமாக வாங்கி வைத்துவிட்ட நிலையில் 20 விழுக்காட்டினருக்கும் குறைவானவர்களே இதுவரை தடுப்பூசி பேட்டுக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த திருப்தியற்ற நிலைமை, பொருளியல் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க தடுப்பூசித் திட்டம் கைகொடுக்கும் என்று நம்பி இருந்த அதிகாரிகளுக்குப் புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
ஹாங்காங் தடுப்பூசித் திட்டம் பிப்ரவரி இறுதிவாக்கில் தொடங்கியது. 16 வயதுக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் இலவசமாகப் போடப்பட்டு வருகின்றன.

