சிட்னி: ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் நேற்று புதிதாக காற்பந்து ரசிகர் உட்பட ஆறு பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று கண்டறியப்பட்டது. இது கடந்த ஏழு மாதங்களில் கண்டறியப்பட்ட ஆக அதிகளவிலான அன்றாட எண்ணிக்கையாகும்.
கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட ஒருவர் மெல்பர்னில் நடந்த காற்பந்தாட்டத்தை நேரில் கண்டு
களித்ததையடுத்து, காற்பந்து ரசிகர்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு ஆஸ்திரேலிய காற்பந்து லீக் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
சென்ற ஞாயிற்றுக்கிழமையன்று மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற உள்ளூர் குழுக்
களுக்கு இடையிலான காற்பந்தாட்டத்தைக் காண சுமார் 23,000 பேர் திரண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவருக்கு அருகில் இருந்தவர்களை அடையாளம் காணும் பணியில் சுகாதார அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
கிட்டத்தட்ட மூன்று மாதங்
களுக்குப் பிறகு சென்ற திங்கட்கிழமை கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டவுடன் அடுத்த நாள் முதலே விக்டோரியாவில் கட்டாய முகக்கவசம், ஒன்றுகூடலில் கலந்துகொள்பவர்களுக்கான எண்ணிக்கை கட்டுப்பாடு போன்றவை நடப்புக்கு வந்தன.
இருப்பினும் கடுமையான புதிய கட்டுப்பாடுகள் இல்லாமல் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்துவது சிரமமாக இருக்கும் என்று ஆஸ்திரேலிய அதிகாரிகள் நேற்று எச்சரித்தனர்.
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களாக 300 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் பலர் நெரிசல்மிக்க இடங்களுக்குச் சென்றிருந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
"தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் முந்திய தொற்று சம்பவங்
களோடு தொடர்புப்படுத்தப்பட்டுள்ளது நல்ல விஷயம். ஆனால், அவர்கள் எத்தகைய இடங்களுக்குச் சென்றார்கள், எத்தனை பேர் தொற்றுக்கு ஆளாகினார்கள் என்பது தெரியாதது கவலைக்குரிய விஷயமாகும்," என்றார் விக்டோரியா மாநில தற்காலிக முதல்வர் ஜேம்ஸ் மெர்லினோ.
வெளிநாட்டிலிருந்து சென்ற ஒருவர் தெற்கு ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தல் முடிந்து, மெல்பர்ன் திரும்பிய ஆறு நாட்களுக்குப் பிறகு, அவருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால் அது எவ்வாறு பரவுகிறது என்பதைக் கண்டுபிடிக்க அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.
இதற்கிடையே, விக்டோரியாவில் இருந்து வருபவர்களுக்குத் தெற்கு ஆஸ்திரேலியா தடை விதித்துள்ளது.

