மலேசியாவில் கிருமித்தொற்று நாளுக்கு நாள் புதிய உச்சம்

மலேசியாவில் கிருமித்தொற்று நாளுக்கு நாள் புதிய உச்சம்

2 mins read
332fd360-cf75-4407-b96a-0e592d28ad21
படம்: இபிஏ -

மலேசியாவில் பதிவாகும் புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் தொடர்ந்து ஏறுமுகமாக உள்ள நிலையில், இன்று அங்கு 7,857 தொற்றுகள் உறுதிசெய்யப்பட்டன.

மூன்றாவது நாளாக மலேசியாவில் 7,000க்கும் மேற்பட்ட கிருமித்தொற்று சம்பவங்கள் உறுதியாகியுள்ளன.

அதற்கு முந்தைய நாளன்று 7,478 கிருமித்தொற்று சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டது.

இன்றைய எண்ணிக்கையுடன் மலேசியாவின் மொத்த கிருமித்தொற்று எண்ணிக்கை தற்போது 541,224ஐ எட்டியுள்ளதாக சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

சிலாங்கூர் மாநிலத்தில் பதிவான 2,675 தொற்றுச் சம்பவங்களே ஆக அதிகம். அதற்கு அடுத்த நிலையில் சரவாக் மாநிலத்தில் 772 சம்பவங்களும் கிளாந்தான் மாநிலத்தில் 754 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

கோலாலம்பூர், ஜோகூர் பாரு ஆகியவற்றில் 500க்கும் மேற்பட்ட கொவிட்-19 சம்பவங்களும் கண்டறியப்பட்டன.

முழு ஊரடங்கை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும்

இதற்கிடையே நாளுக்கு நாள் புதிய உச்சத்தைத் தொட்டு வரும் மலேசியாவின் கிருமித்தொற்று சம்பவங்கள் குறித்து ஜோகூர் மன்னர் இப்ராஹிம் இஸ்கந்தர், மலேசிய அரசாங்கம் 'முழு ஊரடங்கு' நிலையைப் பரிசீலிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

முன்களப் பணியாளர்கள் மீதான பாரத்தைக் குறைக்கவும்

முன்களப் பணியாளர்கள், குறிப்பாக மருத்துவ ஊழியர்களின் நலன் கருதி சமூகத்தில் உள்ள அனைவரும் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்வதில் கடப்பாடு கொள்ள வேண்டும் என்று தமது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் மன்னர் இப்ராஹிம்.

"அவர்கள் களைத்து, சோர்ந்து போய் இருப்பதை நம்மால் காண முடிகிறது. ஆனாலும், தங்களின் பொறுப்பு, வேலையிலிருந்து அவர்கள் தவறவில்லை. அவர்கள் கொவிட்-19 நோயுடன் மட்டும் போராடவில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்," என்றார் மன்னர்.

உருமாறிய கிருமிகள் நாட்டில் தென்படுவது அச்சத்தை அளிப்பதாக தெரிவித்த அவர், இவ்வாறு தினமும் கொவிட்-19 தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே போனால் மேலும் வேறு உருமாறிய கிருமிகள் வரக்கூடும் என்று பகிர்ந்துகொண்டார்.

அனைவருக்கும் பலன் கிட்ட வேண்டுமானால் அவரவர் தங்களின் பங்கை ஆற்றி, தொற்றுப் பரவலை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.