கோலாலம்பூர்: மலேசியாவில் அண்மையில் நிகழ்ந்த ரயில் விபத்து குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ேபசிய அம்னோ கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான தாஜுதீன் அப்துல் ரஹ்மான் 'பிரசாரனா மலேசியா' ரயில்வே நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை நிகழ்ந்த இலகு ரயில் விபத்தில் மூவர் படுகாயம் அடைந்து இன்னமும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து நடந்த நாளன்று சம்பவ இடத்திற்கு தாஜுதீன் அப்துல் ரஹ்மான் வரவில்லை.
இது ஒரு குறையாக பேசப்பட்டது.
இந்த நிலையில் மறுநாள் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இரு ரயில்கள் முத்தமிட்டுக் கொண் டதாகக் கூறி பெரும் சர்ச்சையைக் கிளப்பினார்.
பிரசாரனா ரயில்வே நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளதை செய்தியாளர்கள் சுட்டிக்காட்டியபோது தம்மை ஆத்திரமூட்ட வேண்டாம் என்று அவர் எச்சரித்தார்.
திரு தாஜுதீன் அப்துல் ரஹ்மான் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்து சுமார் 100,000 பேர் கையெழுத்திட்ட மனு அரசாங்கத்திடம் சமர்பிக்கப்பட்டது.
இதையடுத்து 'பிரசாரனா மலேசியா' ரயில்வே தலைவர் பொறுப்பிலிருந்து அவர் உடனடியாக விலக்கப்படுவதாக நிதி அமைச்சு அறிவித்தது.
திரு தாஜுதீன், பிரதமர் முகைதீன் யாசின் தலைமையிலான அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் மிகப்பெரிய கட்சியான அம்னோவில் உச்சமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.
அம்னோ தலைமையில் முன்பு ஆட்சியில் இருந்த தேசிய முன்னணியின் தேர்தல் இயக்குநராகவும் அவர் பதவி வகிக்கிறார்.
இதற்கிடையே இதே அம்னோ கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் புதன்கிழமை அன்று பேசியபோது தாஜுதீன் சார்பில் மன்னிப்புக் கேட்டுக்கொண் டார்.
தாஜுதீின் தனது செயலுக்காக வருந்துவதாக திரு நஜிப் தெரி வித்தார்.

