உலக சுகாதார நிறுவனத்திடம் அமெரிக்கா வலியுறுத்து
ஜெனீவா: கொவிட்-19 கிருமியின் மூலத்தைக் கண்டறிய இரண்டாவது கட்ட விசாரணையை மேற் கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனத்தை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
அதற்கு சீனா மாதிரிகளையும் தரவுகளையும் வழங்கி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அது கேட்டுக்கொண்டது.
கடந்த ஜனவரி-பிப்ரவரியில் சீனாவில் உள்ள வூஹான் நகருக்குச் சென்ற உலக சுகாதார நிறுவனத்தின் குழு அங்கு நான்கு வாரங்களாக முகாமிட்டு கிருமி உருவானது குறித்து விசாரணை நடத்தியது. பின்னர் மார்ச்சில் ெவளியிடப்பட்ட அறிக்கையில் வவ்வாலிலிருந்து மற்றொரு விலங்கு மூலம் மனிதர்களுக்கு கிருமி பரவியிருக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனத்தின் குழு தெரிவித்தது. வூஹான் ஆய்வகத்திலிருந்து கிருமி வெளியேறியிருக்கலாம் என்பதற்கு ஆதாரமில்லை என்றும் குழு சொன்னது.
ஆனால் உலக சுகாதார நிறுவனத்தின் முதற்கட்ட விசாரணை போதுமானதாக இல்லை, உறுதியற்றதாக உள்ளது என்ற அமெரிக்கா, இரண்டாவது கட்ட விசாரணை ேதவை என்று குறிப்பிட்டது. அத்தகைய விசாரணை சீனாவை உள்ளடக்கி வெளிப்படையான, ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டும் என்று அமெரிக்கா கண்டிப்புடன் தெரிவித்தது.
இதற்கு வழக்கம்போல எதிர்ப்பு தெரிவித்துள்ள அமெரிக்காவில் உள்ள சீன தூதரகத்தின் பிரதிநிதி ஒருவர், உலகம் முழுவதும் ஆரம்பக்கட்ட கொவிட்-19 சம்பவங்களை முழுமையாக விசாரிக்க வேண்டும் என்றும் உலகின் பல இடங்களில் உள்ள ரசாயன சோதனைச் சாலைகள் மற்றும் ரகசிய தளங்களில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் உலகம் முழுவதும் பரவி மக்களின் வாழ்க்கையை தலைகீழாகப் புரட்டி போட்டுள்ள கொவிட்-19 கிருமி உருவான இடத்தைக் கண்டறிய தனது உளவுத் துறைக்கு அமெரிக்க அதிபர் பைடன் உத்தரவிட்டுள்ளார்.
சீனாவில் உள்ள சோதனைச்சாலையிலிருந்து கிருமி வெளியேறியிருக்கும் சாத்தியத்தை ஆராய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

