ஹாங்காங்: ஹாங்காங்கின் ஜனநாயக ஆதரவு போராட்டக்காரரும் தொழிலதிபருமான ஜிம்மி லாய்க்கு மேலும் 14 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2019 அக்டோபர் 1ஆம் ேததி சட்டவிரோதமாகக் கூடியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அவருடன் இதே குற்றத்திற்காக மேலும் ஒன்பது பேர் தண்டிக்கப்பட்டனர்.
நேற்று தண்டனை விதிக்கப்பட்ட பத்து பிரபல ஜனநாயகப் போராட்டக்காரர்களில் லாயும் ஒருவர்.
ஃபிகோ சான், 'நீளமுடி' என்று அழைக்கப்படும் லுவங் குவோக்-ஹங், லீ சியுக் யான் ஆகியோரும் தண்டனை பெற்ற பத்து பேரில் அடங்குவர். இவர்களுக்கு 18 மாதங்கள் தண்டனை விதிக்கப்பட்டது. லுவங்கும் லீயும் ஏற்கெனவே சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
திரு லாய்க்கு, வயது 73, இதே போன்று 2019 ஆகஸ்ட் 18, 31ஆம் தேதிகளில் சட்டவிரோதமாகக் கூடியதற்காக இம்மாதம் 14 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்து வருகிறார்.
தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடந்த டிசம்பரிலிருந்து சிறை யில் அடைக்கப்பட்ட அவர், பல முறை பிணையில் விடுவிக்க கோரிக்கை விடுத்தார். ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப் பட்டது.
கடந்த 2020ஆம் ஆண்டில் சீனா அறிமுகப்படுத்திய புதிய சட்டத்தின் கீழ் மூன்று குற்றச்சாட்டுகளை லாய் எதிர்நோக்குகிறார்.
வெளிநாட்டுடன் சேர்ந்து கூட்டு சதியில் ஈடுபட்டது அவற்றில் ஒன்று.
இதற்கிடையே தொழிலதிபர் லாயை மீண்டும் மீண்டும் சிறையில் அடைப்பதை மேற்கத்திய நாடுகளும் மனித உரிமை அமைப்புகளும் குறைகூறியுள்ளன.
ஹாங்காங் மக்களின் சுதந்திரம் நசுக்கப்படுவதாக அவை தெரிவித்தன.

