தாஜுதீன் கைது செய்யப்பட்டு
பிணையில் விடுவிக்கப்பட்டார்
கோலாலம்பூர்: அண்மையில் பிரசாரனா பெர்ஹாட் ரயில்வே நிறுனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட அம்னோவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான தாஜுதீன் அப்துல் ரஹ்மானை அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறி ஊழல் தடுப்புப் பிரிவினர் நேற்று கைது செய்தனர் என்று மலேசிய ஊடகமான 'த நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' தெரிவித்தது. ஊழல் தடுப்புப் பிரிவின் தலைமையகத்தில் அவரிடம் அதிகாரிகள் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். மாலையில் அவர் நிபந்தனை பிணையில் விடுவிக்கப் பட்டார்.
விக்டோரியா: முதல் நாள் முடக்கத்தில்
தொற்றுச் சம்பவங்கள் குறைந்தன
சிட்னி: ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் ஏழு நாள் முடக்கநிலை வியாழன் நள்ளிரவு முதல் தொடங்கியது. இதனால் சாலைகள், கடைகள், உணவகங்களில் ஆள் நடமாட்டமே இல்லை. தலைநகர் மெல்பர்னில் தொடர்ந்து தொற்று பரவியதால் ஏழு நாள் முடக்கம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 12 புதிய உள்ளூர் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதாக விக்டோரியா மாநில அரசாங்கம் நேற்று தெரிவித்தது. மொத்தம் 39 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தைவானுக்கு தடுப்பூசி
வழங்க ஜப்பான் பரிசீலனை
தோக்கியோ: தைவானுக்கு ஆஸ்ட்ராஸெனகா தடுப்பூசிகள் வழங்குவது குறித்து ஜப்பான் ஆலோசித்து வருகிறது. 23 மில்லியன் மக்கள் தொகை கொண்ட தைவானில் ஒரு விழுக்காட்டினருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஜப்பான் தனது தேவைக்கு அதிகமாக 400 மில்லியன் முறைக்கு மேல் போடக்கூடிய தடுப்பூசிகளை வாங்கியுள்ளது. இந்த நிலையில் தைவானுக்கு தடுப்பூசிகளை வழங்கி உதவ ஜப்பான் யோசித்து வருகிறது.

