வியட்னாமில் காற்றில் பரவக்கூடிய புதிய உருமாறிய கிருமி

வியட்னாமில் காற்றில் பரவக்கூடிய புதிய உருமாறிய கிருமி

1 mins read
08458338-64f3-48fd-ac0f-ce62b1901e97
-

வியட்னாமில் புதிய உருமாறிய கொரோனா கிருமி வகை அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும் அது இந்தியாவிலும் பிரிட்டனிலும் முதலில் காணப்பட்ட உருமாறிய கிருமிகளின் கலவை என்றும் வியட்னாமிய சுகாதார அமைச்சர் வேன் தான் லோங் கூறியுள்ளார்.

வியட்னாமின் விஎன் இணைய நாளிதழ் அது பற்றி இன்று (மே 29) செய்தி வெளியிட்டது.

மேலும், புதிய கிருமி காற்றில் மிகவேகமாகப் பரவக்கூடியது என்றார் திரு வேன்.

குறிப்பாக, இந்தியாவில் முதலில் காணப்பட்ட உருமாறிய கிருமியுடன் பிரிட்டனில் காணப்பட்ட உருமாறிய கிருமி கலந்திருப்பதாக பரிசோதனைகள் காட்டியுள்ளன.

இந்த புதிய உருமாறிய கிருமி பற்றி உலக மரபணு வரைபடத்தில் வியட்னாம் தகவல் தெரிவிக்கும் என்று திரு வேன் கூறினார்.

வியட்னாம் கடந்தாண்டு கொவிட்-19 கிருமிப் பரவலை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியது. ஆனால் கடந்த ஒரு மாதமாக அங்கு மீண்டும் கிரமிப் பரவல் தலைதூக்கியுள்ளது. அந்நாட்டின் 63 நகரங்களில் 31இல் தொற்று பரவியுள்ளது.

கிட்டத்தட்ட 3,600 பேருக்கு அங்கு கொவிட்-19 தொற்றியுள்ளது. இவர்களில் பலருக்கு இந்த புதிய உருமாறிய கிருமி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

புதிய உருமாறிய கிருமியால் மிக வேகமாக தன்னைத் தானே பெருக்கிக் கொள்ளும் தன்மை உள்ளதாக ஆய்வுக்கூடப் பரிசோதனைகள் காட்டுகின்றன.

குறிப்புச் சொற்கள்