கோப்பன்ஹேகன்: கொரோனா கிருமியின் புதிய உருமாறிய வகைகளிடம் மிக வேகமாக மற்றவர் களுக்கு தொற்றும் ஆற்றல் இருப்பது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய வட்டார இயக்குநர் கவலை தெரிவித்திருக்கிறார். டாக்டர் ஹான்ஸ் குளூக் ஏஎஃப்பி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அதனைத் தெரிவித்தார்.
உலக மக்களில் குறைந்தது 70 விழுக்காட்டினருக்கு தடுப்பூசி போட்டால்தான் கொவிட்-19 கிருமிப் பரவலை முடிவுக்குக் கொண்டு வரலாம் என்றும் அவர் கூறினார்.
பிரிட்டனில் முதலில் அடையாளம் காணப்பட்ட உருமாறிய கொரோனாவையை விட இந்தியாவில் முதலில் காணப்பட்ட கொரோனா கிருமி மிக வேகமாக தொற்றியதை அவர் சுட்டிக்காட்டினார். தடுப்பூசி போடும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதோடு தடுப்பூசிகளின் எண்ணிக்கையையும் பெருக்க வேண்டும் என்றார் அவர்.
பெருந்தொற்று காலத்தில் வேகமான நடவடிக்கைகளே முக்கியம் என்று டாக்டர் குளுக் வலியுறுத்தினார். உலக சுகாதார நிறுவனம் பெருந்தொற்றை அறிவித்தபோது பல நாடுகள் மெதுவாக செயல்பட்டன என்றார் அவர். குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் மந்தகதியில் உள்ளதாக அவர் குறைகூறினார்.
வியட்னாமில் புதிய உருமாறிய கிருமி
வியட்னாமில் புதிய உருமாறிய கொரோனா கிருமி வகை அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும் அது இந்தியாவிலும் பிரிட்டனிலும் முதலில் காணப்பட்ட உருமாறிய கிருமிகளின் கலவை என்றும் வியட்னாமிய சுகாதார அமைச்சர் வேன் தான் லோங் கூறியுள்ளார்.
வியட்னாமின் விஎன் இணைய நாளிதழ் அது பற்றி நேற்று செய்தி வெளியிட்டது.
ேமலும், புதிய கிருமி காற்றில் மிகவேகமாகப் பரவக்கூடியது என்றார் திரு வேன்.
குறிப்பாக, இந்தியாவில் முதலில் காணப்பட்ட உருமாறிய கிருமிக்குள் பிரிட்டனில் காணப்பட்ட உருமாறிய கிருமி கலந்திருப்பதாக பரிசோதனைகள் காட்டியுள்ளன.
இந்த புதிய உருமாறிய கிருமி பற்றி உலக மரபணு வரைபடத்தில் வியட்னாம் தகவல் தெரிவிக்கும் என்று திரு வேன் கூறினார்.
வியட்னாம் கடந்தாண்டு கொவிட்-19 பரவலை சிறப்பாகக் கட்டுப்படுத்தியது. ஆனால் கடந்த ஒரு மாதமாக அங்கு மீண்டும் கிருமிப் பரவல் தலைதூக்கியுள்ளது. அந்நாட்டின் 63 நகரங்களில் 31இல் தொற்று பரவியுள்ளது.
கிட்டத்தட்ட 3,600 பேருக்கு அங்கு கொவிட்-19 தொற்றியுள்ளது. இவர்களில் பலருக்கு இந்த புதிய உருமாறிய கிருமி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. புதிய உருமாறிய கிருமிக்கு மிக வேகமாக பன்மடங்கு பெருக்கிக் கொள்ளும் தன்மை உள்ளதாக பரிசோதனைகள் காட்டுகின்றன.

