நியூயார்க்/ஜகார்த்தா: மியன்மாருக்கு எதிராக ஐக்கிய நாட்டு நிறுவனப் பொதுச் சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்படுவதற்கான முயற்சியில் ஆசியான் நாடுகள் ஈடுபட்டுள்ளன.
மியன்மாருக்கு எதிரான நகல் தீர்மானத்தை வரைந்துள்ள லீஷ்டென்ஸ்டெய்னுக்கு அவை கடந்த 19ஆம் தேதி கடிதம் அனுப்பியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் நேற்று தெரிவித்தது. மியன்மார் தவிர்த்த மற்ற ஆசியான் நாடுகள் அதில் கையொப்பம் இட்டுள்ளன.
மியன்மாருக்கு எதிரான ஆயுதத் தடையைக் கோரும் குறிப்பை நகல் தீர்மானத்திலிருந்து நீக்கவேண்டும் என்று ஆசியான் நாடுகள் கூறியுள்ளன.
மியன்மாரின் முக்கிய தலைவர் திருவாட்டி ஆங் சான் சூச்சியை ராணுவம் கைது செய்தது பற்றி நகல் தீர்மானத்தில் கண்டனம் இடம்பெற்றிருக்கிறது. அது கைதுக்கு கவலை தெரிவிக்கும் வாசக மாக மாற்றப்பட வேண்டும்.
மேலும் திருவாட்டி சூச்சி விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் அதில் இடம்பெற வேண்டும் என்று ஆசியான் நாடுகள் கூறின.
ஐக்கிய நாட்டுப் பொதுச் சபை தீர்மானம் ஆசியான் நாடுகளுக்கு உதவுவதாக இருக்க வேண்டும் என்றால் அது ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று அவை வலியுறுத்தின.
நகல் தீர்மானத்தின் மீது கடந்த வாரம் திட்டமிடப்பட்ட வாக்கெடுப்பு கடைசி நேரத்தில் ஒத்தி வைக்கப்பட்டது.

