ஜோகூர் பாரு: கொவிட்-19 கிருமிப் பரவல் காரணமாக கடந்த ஓராண்டாக சிங்கப்பூர் மலேசிய எல்லை மூடப்பட்டிருப்பதால் ஜோகூரில் கூட்டம் இல்லை. அதனால் அங்குள்ள இந்திய வர்த்தகங்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளதன.
ஜோகூர் பாரு இந்திய வர்த்தகச் சங்கத்தில் இடம்பெற்றுள்ள சுமார் 1500 வர்த்தகங்களில் பாதி, தங்களைக் காப்பாற்றிக் கொள்ள சிரமப்படுவதாகவும் மேலும் 30% வர்த்தகங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் திரு பி.சிவக்குமார் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் கூறினார்.
"கடைகளின் வெளியே வாடகைக்கு விடப்படும் என்றோ விற்பனைக்கு என்றோ அறிவிப்புப் பலகைகள் மாட்டப்படுவதை அதிகமாகப் பார்க்க முடிகிறது. முன்பெல்லாம் கடை வாடகைகள் 15,000 முதல் 18,000 ரிங்கிட்டாக இருந்தது. இப்போது வாடகைத் தொகை பாதியாக குறைந்துள்ளது," என்றார் திரு சிவக்குமார்.
ஜோகூர் பாருவில் உணவுக் கடைகளையும் அக்கம்பக்கக் கடைகளையும் நடத்தி வரும் என். நீல ராஜா ஓராண்டு பேராட்டத்துக்குப் பின்னர் 20 அக்கம்பக்கக் கடைகளையும் 10 இந்திய முஸ்லிம் உணவுக் கடைகளையும் மூடிவிட்டதாகச் சொன்னார். நிலைமை விரைவில் மேம்படாவிட்டால், எஞ்சியுள்ள ஏழு சிறிய கடைகளையும் நான்கு உணவுக்கடைகளையும் மூடப்போவதாக அவர் கூறினார்.
வாடகையும் சம்பளங்களும் கட்டுப்படியாகவில்லை என்றார் அவர்.
ஜோகூர் பாரு நகர்ப்பகுதி கடந்த ஓராண்டாக வெறிச்சோடிக் காணப்படுவதாக வங்கி நிர்வாகி பிரியசகி ராஜ் கூறினார்.