மெல்பர்ன்: தடுப்பூசி போட்டுக் கொள்வதில் ஆர்வம் காட்டாமல் இருந்த ஆஸ்திரேலிய மக்கள், தற்போது தடுப்பூசி போட்டுக்கொள்ள முனைப்பு காட்டுவதாக ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று கூறியுள்ளது.
விக்டோரியாவில் கிருமிப் பரவல் மீண்டும் தலைதூக்கியுள்ளதால், தடுப்பூசியின் தேவையை மக்கள் உணர்ந்துள்ளதாகக் கூறப்
படுகிறது.
தடுப்பூசி போட்டுக்கொள்வோர் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் வரையிலான சென்ற வாரத்தில் சுமார் 337,765 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். அதற்கு முந்திய வாரம் இந்த எண்ணிக்கை 293,836ஆக இருந்தது.
விக்டோரியா மாநிலத்தில் மட்டுமல்லாமல் நியூ சவுத் வேல்ஸ், குவீன்ஸ்லாந்திலும் தடுப்பூசிக்கான தேவை அதிகரித்துள்ளதாக மருத்துவர் கரேன் பிரைஸ் கூறியுள்ளார்.
பலர் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வந்தாலும் ஆஸ்ட்ராஸெனிகா போட்டுக்கொள்ளக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதால், பைஃசர் தடுப்பூசிக்காக காத்திருக்க தயங்கவில்லை என்றும் அந்த ஊடகச் செய்தி கூறுகிறது.
வரும் வாரங்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே முதியோர் பராமரிப்பு இல்ல ஊழியர் ஒருவர் உட்பட ஆஸ்திரேலியாவின் விக்டோரியா நகரில் நேற்று ஐந்து பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது.
மூத்தோர் பராமரிப்பு இல்ல ஊழியருக்கு எவ்வாறு கிருமித் தொற்றியது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
பராமரிப்பு இல்லவாசிகள் தங்கள் அறைகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். இல்லவாசிகளில் பாதிக்கும் மேற்பட்டோருக்கும், அதன் ஊழியர்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
வெளிநாட்டிலிருந்து திரும்பிய ஒருவருக்குத் தனிமைப்படுத்தல் காலம் முடிந்த பிறகு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து விக்டோரியாவில் மீண்டும் கிருமி பரவல் தலைதூக்கியது.
வெளிநாட்டிலிருந்து திரும்பிய
வரோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கிட்டத்தட்ட 70 விழுக்காட்டினருக்குத் தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளதாக மாநில தற்காலிக தலைவர் ஜேம்ஸ் மெர்லினோ தெரிவித்துள்ளார்.
கிருமிப் பரவல் காரணமாக கடந்த வியாழன் முதல் அங்கு ஒரு வார கால முழு முடக்கம் நடை
முறைப்படுத்தப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் மீண்டும் கிருமிப் பரவல் எதிரொலி

