யங்கூன்: கிருமித்தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை அதிகரிப்பு, உயிர்வாயு பற்றாக்குறை என ராணுவ ஆட்சி நடைபெறும் மியன்மாரில் சுகாதார கட்டமைப்பு நெருக்கடி நிலைக்கு ஆளாகும் அச்சுறுத்தல் நிலவுகிறது.
முன்னைய ஆங் சான் சூச்சியின் ஆட்சியில் பரிசோதனைகள், தனிமைப்படுத்தல், சிகிச்சை என கொவிட்-19ஐ கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டிருந்த நிலையில், அவரை நீக்கிவிட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.
கிருமிப் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவது தனது முதன்மை பணிகளில் ஒன்று என்று ராணுவ ஆட்சிக்குழு கூறியிருந்தாலும் அங்கு தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்தவாறு உள்ளது.
ராணுவ ஆட்சியை எதிர்ப்பதற்காக மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவ ஊழியர்கள் என பலரும் குடிமை ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்ததால் பல மருத்துவ
மனைகள் மக்களுக்குச் சிகிச்சை அளிக்க முடியாமல் திணறுகின்றன.
எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக 150 சுகாதார ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பலர் தேடப்பட்டு வருகின்றனர். இதுதவிர ராணுவத் தாக்குதல்களில் 13 மருத்துவ ஊழியர்கள் மாண்டுவிட்டதாகவும் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
இந்திய எல்லையையொட்டியுள்ள மியன்மாரின் சிக்கா மருத்துவமனையில் 11 பேர் பணிபுரிய வேண்டிய இடத்தில் மூவர் மட்டுமே இருப்பதாக தாதி ஒருவர் கூறினார்.
ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு ஒரு வாரம் முன்பு நாளொன்றுக்கு சராசரியாக 17,000 கொவிட்-19 பரிசோதனைகள் செய்யப்பட்ட இடத்தில் தற்போது நாளொன்றுக்கு வெறும் 1,200 பரிசோதனைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுவது மிகவும் கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
குறைவான பரிசோதனைகளால் கிருமித்தொற்று மிகவும் குறைவாக தெரியக்கூடும் என்பது குறித்தும் அண்டை நாடான இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கிருமித்தொற்றால் மியன்மாரில் ஏற்படக்கூடிய பாதிப்பு பற்றியும் கவலை எழுந்துள்ளது.

