போர்ட்டோ: இரண்டாவது முறையாக சாம்பியன்ஸ் லீக் வெற்றிக் கிண்ணத்தைத் தனதாக்கிக்கொண்டது செல்சி காற்பந்துக் குழு.
அக்குழுவிற்கு இது சாதாரண வெற்றியல்ல. தாங்கள் உலகின் சிறந்த காற்பந்துக் குழு என்பதைப் பறைசாற்றும் வகையில் நடப்பு இங்கிலிஷ் பிரிமியர் லீக் வெற்றியாளரான மான்செஸ்டர் சிட்டியை வீழ்த்தி கிண்ணத்தை வென்றுள்ளது செல்சி.
சென்ற வாரம் இபிஎல் கிண்ணத்தை வென்ற மகிழ்ச்சியோடும் மெத்தனத்தோடும் விளையாடிய சிட்டி குழுவிற்கோ இந்த தோல்வி பேரிடியாகும்.
ரோட்ரி, பெர்னாண்டினோ என இரண்டு தற்காப்பு வீரர்களும் இல்லாமல் களமிறங்கிய தவற்றுக்கு சிட்டி குழுவின் நிர்வாகி கார்டியோலாவே முற்றிலும் பொறுப்பாவார்.
சிட்டிக் குழுவின் இந்தக் குழப்பமான வியூகம், வழக்கம் போல் விளையாடிய செல்சிக்கு எந்த நெருக்கடியையும் கொடுக்கவில்லை.
செல்சியின் மேசன் மவுண்ட் உதைத்த பந்தை சக வீரரான கை ஹேவர்ட்ஸ் சிட்டி வலைக்குள் தள்ளி வெற்றி கோலாக்கினார். கோல் போடும் சில வாய்ப்புகளை சிட்டி தவறவிட, 1-0 என்ற கோல்கணக்கில் வென்றது செல்சி.
செல்சி நிர்வாகியாக டுக்கெல் அக்குழுவிற்காக வென்ற முதல் கிண்ணம் இது.

