'கிருமித்தொற்று குறைந்தாலும்
கட்டுப்பாடுகள் நடப்பில் இருக்கும்'
தைப்பே: தைவானில் கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் அந்நாட்டின் சுகாதார அமைச்சர் கூறியிருக்கும் அதே சமயத்தில், அடுத்த சில வாரங்களுக்கு கட்டுப்பாடுகள் நடப்பில் இருக்கும் என்றும் சொன்னார். நேற்று அங்கு 347 தொற்று சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டன. தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று அங்கு 400க்கும் குறைவான தொற்று சம்பவங்கள் பதிவானது.
ஹாங்காங் நிறுவனங்களின்
மூத்த நிர்வாகிகளுக்குத் தளர்வு
ஹாங்காங்: நிறுவனங்களின் உயர் அதிகாரிகளின் உலகளவிலான பயணத்தை எளிதாக்கும் வகையில், தடுப்பூசி போட்டுக்கொள்ளும் பட்சத்தில் அவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள தேவையில்லை என்று ஹாங்காங் அறிவித்துள்ளது.
சுமார் 500 நிறுவனங்களைச் சேர்ந்த தடுப்பூசி போட்டுக் கொண்ட மூத்த நிர்வாகிகள் தனிமைப்படுத்தல் இல்லாத
பயணத்திற்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம் என்று ஹாங்காங்கின் நிதி சேவைகள் அமைப்பு அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது மக்களிடையே கோபத்தை அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
டார்சன் பட பிரபல நடிகர், மனைவி விமான விபத்தில் மரணம்
வாஷிங்டன்: அமெரிக்காவின் டென்னசி விமான நிலையத்திலிருந்து சிறிய ரக விமானம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் விமான நிலையத்துக்கு அருகில் உள்ள பெர்சி பிரைஸ்ட் ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த எழுவரும் ஏரியில் மூழ்கி உயிரிழந்தனர்.
இந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் அமெரிக்காவின் பிரபல நடிகர் ஜோ லாரா மற்றும் அவரது மனைவி க்வென் ஷாம்ப்ளின் லாரா ஆகியோரும் அடங்குவர். 1989ஆம் ஆண்டு, அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி திரைப்படமான "டார்சன் இன் மன்ஹாட்டனில்" டார்சானாக லாரா நடித்திருந்தார்.

