லண்டன்: இங்கிலாந்து பிரமியர் லீக் குழு எவர்ட்டனின் நிர்வாகப் பொறுப்பை ஏற்று, முடிந்த காற்பந்து பருவத்தில் அந்தக் குழுவை 10ஆம் நிலைக்குக் கொண்டு வந்த கார்லோ அன்சிலோட்டி, முன்னர் தாம் நிர்வகித்த ரியால் மட்ரிட் குழுவுக்கே திரும்பியுள்ளார்.
இவர் முன்னர், 2013ஆம் ஆண்டிலிருந்து 2015ஆம் ஆண்டுவரை ரியால் மட்ரிட் குழுவை நிர்வகித்த அனுபவம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரியால் மட்ரிட் குழுவின் நிர்வாகப் பொறுப்பிலிருந்து ஸினடின் ஸிடான் விலகியதைத் தொடர்ந்து அவர் வகித்த பொறுப்பை தற்போது அன்சிலோட்டி ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதனால், ஐந்து ஆண்டுகளில் ஆறாவது நிர் வாகியைத் தேடும் நிலைக்கு எவர்ட்டன் குழு தற்பொழுது தள்ளப்பட்டுள்ளது.
ரியால் மட்ரிட் குழுவுக்கு மூன்றாண்டு ஒப்பந்தத்தில் செல்லும் அன்சிலோட்டி தமக்கு இது ஓர் எதிர்பாராமல் கிடைத்த வாய்ப்பு என்று குறிப்பிட்டுள்ளார். "எனக்கு எவர்ட்டனில் உள்ள அனைவர் மீதும் மிகுந்த மரியாதை உள்ளது. அவர்கள் தங்கள் கண்முன்னே தோன்றும் வாய்ப்புகளைப் பயன் படுத்தி வெற்றி பெறுவர் என்று நம்புகிறேன். எவர்ட்டனில் எனது காலம் மகிழ்ச்சியானது.
ஆனால் எனக்கு தற்பொழுது கிடைத்திருப்பது எதிர்பார்க்காத வாய்ப்பு," என்று அன்சிலோட்டி கூறுகிறார்.

