பியூனஸ் அய்ரஸ்: குழுத்தலைவர் லயனல் மெஸ்ஸி கோலடித்தும் அர்ஜெண்டினா காற்பந்துக் குழுவால் சிலியை வெற்றிகொள்ள இயலவில்லை.
சிலியின் நட்சத்திர வீரரும் முன்னாள் பார்சிலோனா, மான்செஸ்டர் யுனைடெட் வீரருமான அலெக்சிஸ் சான்செஸ் பதில் கோலடித்ததால், இவ்விரு குழுக்களுக்கும் இடையிலான உலகக் கிண்ணக் காற்பந்து தகுதிச் சுற்று ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.
சிலி அணித்தலைவரும் முன்னாள் பார்சிலோனா, மான்செஸ்டர் சிட்டி கோல்காப்பாளருமான கிளாடியோ பிராவோ மும்முறை மெஸ்ஸியின் கோல் முயற்சிகளை முறியடித்தார்.
ஆயினும், 23வது நிமிடத்தில் கிடைத்த கோல் வாய்ப்பினைப் பயன்படுத்தி, பிராவோவை ஏமாற்றி மிக எளிதாக கோலடித்து, தமது அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார் மெஸ்ஸி. ஆனால், அடுத்த 12வது நிமிடத்திலேயே அந்த முன்னிலையை ஈடுகட்டி, அர்ஜெண்டினாவுக்கு எதிராகத் தமது முதல் கோலைப் பதிவுசெய்தார் சான்செஸ்.
இதையடுத்து, தென்னமெரிக்கக் கண்டத்திற்கான தகுதிச் சுற்றுப் புள்ளிப் பட்டியலில் அர்ஜெண்டினா 11 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் சிலி ஐந்து புள்ளிகளுடன் ஏழாமிடத்திலும் உள்ளன.
அர்ஜெண்டினாவின் சான்டியாகோ டெல் எஸ்டெரோ நகரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மட்ரே டி சியுடாடேஸ் விளையாட்டரங்கில் இந்த ஆட்டம் நடைபெற்றது.
ஆட்டம் தொடங்குமுன் அரங்கிற்கு வெளியே அர்ஜெண்டினா முன்னாள் காற்பந்து நட்சத்திரம் டியேகோ மரடோனாவின் முழு உருவச் சிலை திறந்து வைக்கப்பட்டது.
இதனிடையே, 12 புள்ளிகளுடன் பட்டியலின் முதலிடத்தில் இருக்கும் பிரேசில் நேற்றிரவு ஈக்வடோரை எதிர்த்து ஆடவிருந்தது.