செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
fbdb78d9-8547-40c7-89b5-04a086ada495
-

பன்னாட்டு நிறுவனங்களுக்கு வரி

லண்டன்: பணக்கார நாடுகளை உள்ளடக்கிய 'ஜி7' குழு, பன்னாட்டு நிறுவனங்களுக்கு வரிவிதிக்கும் உடன்பாட்டை எட்டியிருப்பதாக பிரிட்டிஷ் நிதியமைச்சர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். லண்டனில் நடந்த நிதியமைச்சர்கள் கூட்டத்தில், அத்தகைய நிறுவனங்களுக்கு குறைந்தது 15% வரிவிதிப்பது என உடன்பாடு எட்டப்பட்டது. இதனால், அமேசான், கூகல் உள்ளிட்ட நிறுவனங்கள் பாதிக்கப்படலாம். அந்த வரி மூலம் கிடைக்கும் பில்லியன்கணக்கான டாலர் பணம், கொவிட்-19 நெருக்கடியின்போது வாங்கிய கடன்களை அடைக்க அரசாங்கங்களுக்கு உதவும் எனக் கூறப்படுகிறது.

விக்டோரியாவில் ஐவர் பாதிப்பு

மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவில் மக்கள்தொகை மிகுந்த இரண்டாவது மாநிலமான விக்டோரியாவில் நேற்று புதிதாக சமூக அளவில் ஐவர்க்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது. புதிய கிருமித்தொற்றுக் குழுமத்தில் அதிகம் பரவக்கூடிய உருமாறிய கொரோனா கிருமி கண்டுபிடிக்கப் பட்டதை அடுத்து, அதற்கு மூலகாரணத்தைக் கண்டறியும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். விக்டோரியத் தலைநகர் மெல்பர்னில் வரும் 10ஆம் தேதி வரை முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

நைஜீரியாவில் டுவிட்டருக்குத் தடை

அபுஜா: அதிபர் முகம்மது புகாரி வெளியிட்ட பதிவை நீக்கியதால் டுவிட்டர் சமூக ஊடகத்திற்கு நைஜீரியா கால வரையறையின்றி தடை விதித்து இருக்கிறது. அரசாங்கக் கட்டடங்கள் மீது தாக்குதல்கள் தொடுத்த குழுக்கள் தண்டிக்கப்படும் என மிரட்டல் விடுத்து அதிபர் வெளியிட்ட பதிவு, தனது கொள்கைக்கு எதிராக இருப்பதாகக் கூறி, டுவிட்டர் அதனை நீக்கியது.

டிரம்ப்பின் ஃபேஸ்புக் கணக்கு முடக்கம்

நியூயார்க்: அமெரிக்க முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் கணக்குகளை ஃபேஸ்புக் நிறுவனம் ஈராண்டுகளுக்கு முடக்கி வைத்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்தில் இடம்பெற்ற வன்முறை தொடர்பில் டிரம்ப் வெளியிட்ட பதிவுகளைத் தொடர்ந்து, அவர் கால வரம்பின்றி அந்தத் தளங்களில் செயல்பட தடை விதிக்கப்பட்டது. டிரம்ப்பின் செயல்கள் தனது விதிகளைக் கடுமையாக மீறும் வகையில் அமைந்ததாக ஃபேஸ்புக் குறிப்பிட்டது. இந்நிலையில், ஃபேஸ்புக்கின் இந்த நடவடிக்கை கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் தமக்கு வாக்களித்த 75 மில்லியன் பேரை அவமதிப்பதாக உள்ளது என்று டிரம்ப் கூறியிருக்கிறார்.

3-17 வயதினர்க்கு சினோவேக் தடுப்பூசி: சீனா சிறப்பு அனுமதி

பெய்ஜிங்: சினோவெக் பயோடெக் நிறுவனத்தின் கொவிட்-19 தடுப்பூசியை அவசரமான வேளைகளில் மூன்று முதல் 17 வயதுக்குட்பட்டோர்க்குப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அந்நிறுவனத்தின் தலைவர் யின் வெய்டோங் தெரிவித்துள்ளார். அத்தடுப்பூசி 3-17 வயதுப் பிரிவினரிடத்தில் நோய்த் தடுப்பாற்றலைத் தூண்டுவதும் இலேசான பக்கவிளைவுகளே ஏற்படுவதும் முதல், இரண்டாம் கட்ட மருத்துவப் பரிசோதனைகளின் முதற்கட்ட முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது. இதற்கிடையே, சினோஃபார்ம் நிறுவனமும் தனது கொரோனா தடுப்பூசியை இளம் வயதுப் பிரிவினர்க்குச் செலுத்த அனுமதி கோரி, தரவுகளைத் தாக்கல் செய்துள்ளது.