மலேசியாவில் 6,000க்கும் குறைவான கிருமித்தொற்றுச் சம்பவங்கள்
கோலாலம்பூர்: மலேசியாவில் கொரோனா கிருமிப் பரவல் தொடர்ந்து மூன்றாவது நாளாக குறைந்துள்ளது. அதோடு பல நாட்களுக்குப் பிறகு அங்கு கிருமித்தொற்றுக்கு ஆளாவோர் அன்றாட எண்ணிக்கை 6,000த்திற்கும் கீழ் பதிவானது.
முந்திய நாள் இந்த எண்ணிக்கை 6,241ஆக இருந்த நிலையில், நேற்று 5,271 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது.
சிலாங்கூர், சரவாக் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் அதிக தொற்று சம்பவங்கள் பதிவாகின.
63 மடங்கு உயர்வு
இதற்கிடையே, லபுவானில் கிருமிப்பரவல் 63 மடங்கு அதிகரித்துள்ளதாக அம்மாநில கொவிட் -19 பணிக்குழுத் தலைவர் ரித்துவான் இஸ்மாயில் கூறியுள்ளார்.
கொவிட்-19 நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளில் தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை 10 விழுக்காட்டிற்கு மேல் உயர்ந்துள்ளது.
கடந்த மாத தொடக்கத்தில் 30க்கும் குறைவான தொற்றுச் சம்பவங்களே இருந்த நிலையில், தற்போது அங்கு 1,885 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு தற்போது நாளொன்றுக்கு 200க்கும் மேற்பட்ட தொற்று சம்பவங்கள் பதிவாகத் தொடங்கியுள்ளன.
கட்சித் தலைவர்களைச்
சந்திக்கவுள்ள மன்னர்
இந்நிலையில், மலேசியாவில் அவசரகால பிரகடனம் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முடிவடையவுள்ள நிலையில், இவ்வாரத்தில் மலேசிய மன்னர், அரசியல் கட்சித் தலைவர்களுடன் உயர்மட்ட சந்திப்புகளை நடத்தவுள்ளார்.
முதலாவதாக வரும் புதன் கிழமையன்று ஆளும் பெர்சத்துவின் தலைவரைச் சந்திக்கவுள்ளார் மன்னர் சுல்தான் அப்துல்லா அகமது ஷா. வியாழனன்று எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி, பிகேஆர் கட்சியையும் வெள்ளியன்று மகாதீரின் பெஜுவாங் தனா ஏர் கட்சியையும் அம்னோவையும் மன்னர் சந்திக்கவுள்ளார்.

