லாகூர்: தான் ஒரு மருத்துவர் என்று பிறரை நம்ப வைத்த முன்னாள் பாதுகாவல் அதிகாரி, மருத்துவமனை நோயாளி ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்ததை அடுத்து அந்த 80 வயது நோயாளி உயிரிழந்துவிட்டார். பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரப் பொது மருத்துவமனையில் ஷமீமா பேகம் என்பவரின் முதுகில் இருந்த காயத்திற்குச் சிகிச்சை அளிப்பதாக முகம்மது வாஹிட் பத் கூறியிருந்தார்.
அறுவை சிகிச்சைக்கான கட்டணத்தை முதியவரின் குடும்பத்தார் அந்த ஆடவரிடம் தந்தனர். அத்துடன் காயத்திற்கான கட்டை மாற்றுவதற்கு மேலும் இரண்டு முறை வீட்டுக்கு வருவதற்கும் கட்டணம் செலுத்தப்பட்டது. இருப்பினும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு முதியவரின் ரத்தக் கசிவும் வலியும் அதிகரித்ததை அடுத்து அவர்கள் மருத்துவமனைக்குத் திரும்பியபோதுதான் நடந்ததை அறிந்துகொண்டனர். இந்நிலையில் பாதுகாவல் அதிகாரி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. மருத்துவமனை பெரிதாக இருப்பதால் ஒவ்வொரு மருத்துவரும், ஒவ்வொரு நபரும் என்ன செய்கிறார்கள் என்பதை எந்நேரமும் கண்காணிக்க முடியாது என்று பெயர் குறிப்பிட விரும்பாத மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.