கடந்த ஆண்டு நடைபெற இருந்த ஐரோப்பிய கிண்ணக் காற்பந்துப் போட்டி (யூரோ 2020) கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியைப் போலவே ஐரோப்பிய கிண்ணக் காற்பந்துப் போட்டியும் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.
இந்நிலையில், யூரோ 2020க்கான காத்திருப்பு ஒரு முடிவுக்கு வந்துள்ளது. போட்டிக்கான கால அட்டவணையின்படி இந்தப் போட்டியின் முதல் ஆட்டம் சிங்கப்பூர் நேரப்படி இன்று அதிகாலை 3 நடைபெற்றிருக்கும். முதல் ஆட்டத்தில் துருக்கியும் இத்தாலியும் மோதுகின்றன.
யூரோ 2020 அடுத்த மாதம் 11ஆம் தேதி வரை நடைபெறும். ஆட்டங்கள் 11 நாடுகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய கண்டத்தில் உள்ள பல நாடுகளில் ஐரோப்பிய கிண்ணக் காற்பந்துப் போட்டி ஒரே நேரத்தில் நடைபெறும்.
1998ஆம் ஆண்டுக்குப் பிறகு ஸ்காட்லாந்து முதல்முறையாக பிரதான காற்பந்துப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இங்கிலாந்து அதன் பெரும்பாலான ஆட்டங்களை சொந்த மண்ணில் விளையாடும். தொடர்ந்து இரண்டாவது முறையாக ஐரோப்பிய காற்பந்துப் போட்டியில் வேல்ஸ் களமிறங்குகிறது.
இங்கிலாந்தும் ஸ்காட்லாந்தும் ஒரே பிரிவில் இடம்பெறுகின்றன. 1996ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரதான காற்பந்துப் போட்டி ஒன்றை பிரிட்டன் முதல்முறையாக ஏற்று நடத்துகிறது. அந்தப் போட்டியில் ஜெர்மனி வாகை சூடியது.
இவ்வாண்டு நடைபெறும் போட்டியில் இங்கிலாந்தின் புகழ்பெற்ற வெம்பிலி விளையாட்டரங்கத்தில் முதல் சுற்று ஆட்டங்கள், காலிறுதிக்கு முந்திய ஆட்டம், இரண்டு அரையிறுதி ஆட்டங்கள், இறுதி ஆட்டம் ஆகியவை நடைபெறும்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ, ஹாலந்தின் ஆம்ஸ்டர்டாம், அசர்பைஜானின் பாக்கு, ருமேனியாவின் புக்காரெஸ்ட், ஹங்கேரியின் புடாபெஸ்ட், டென்மார்க்கின் கோப்பன் ஹேகன், ஜெர்மனியின் மியூனிக், இத்தாலியின் ரோம், ஸ்பெயினின் செவியா ஆகிய நகரங்களில் ஆட்டங்கள் நடைபெறும்.
அயர்லாந்தின் டப்ளின் நகரில் நடைபெற இருந்த ஆட்டங்கள் ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்கும் லண்டனுக்கும் மாற்றப்பட்டுள்ளன. ஸ்பெயினின் பில்பாவ் நகரில் நடைபெற இருந்த ஆட்டங்கள் செவியா நகருக்கு மாற்றப்பட்டுள்ளன. விளையாட்டரங்கத்திற்குள் ரசிகர்களை அனுமதிக்க டப்ளினும் பில்பாவும் அனுமதிக்காததால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் உள்ள புஸ்காஸ் விளையாட்டரங்கத்தில் 68,000 ரசிகர்கள் அமரலாம். அனைத்து இடங்களையும் நிரப்ப விளையாட்டரங்கத்தின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இங்கிலாந்தின் வெம்ப்லி விளையாட்டரங்கத்தில் 90,000 ரசிகர்கள் அமரலாம். இம்மாதம் 21ஆம் தேதியன்று பிரிட்டனில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்த பிறகு இது சாத்தியமாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விளையாட்டரங்கங்களில் எத்தனை பேர் அமர்ந்து ஆட்டத்தைக் காணலாம் என்பது குறித்து முடிவெடுக்கும் உரிமை அந்தந்த நகரங்களுக்குத் தரப்பட்டுள்ளது. இதில் ஐரோப்பிய காற்பந்துச் சங்கம் தலையிடவில்லை.
வெம்ப்லி விளையாட்டரங்கத்துக்குச் செல்லும் ரசிகர்கள் ஆட்டம் தொடங்குவதற்கு அதிகபட்சம் 48 மணி நேரத்துக்கு முன்னால் கொவிட்-19 மருத்துவப் பரிசோதனைக்கு உட்பட்டு கிருமித்தொற்று இல்லை என்று உறுதி செய்ய வேண்டும். விளையாட்டரங்கத்தில் இருக்கும்போது முகக்கவசம் அணிய வேண்டும்.
விளையாட்டரங்கத்தில் ஆங்காங்கே கை சுத்திகரிப்பான் போத்தல்கள் வைக்கப்பட்டிருக்கும். மற்ற ரசிகர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரசிகர்கள் கொவிட்-19 மருத்துவப் பரிசோதனை செய்து கிருமித்தொற்று ஏற்படவில்லை என்று உறுதி செய்யப்பட்ட பிறகே அவர்கள் விளையாட்டரங்கத்துக்குள் அனுமதிக்கப்படுவர் என்று ஆஸ்ம்டர்டாம் நகரும் செவியா நகரும் தெரிவித்துள்ளன. ரசிகர்களின் உடல்வெப்பநிலையும் பரிசோதிக்கப்படும் என்று அவை கூறின.
லண்டன், புக்காரெஸ்ட், புடாபெஸட், கோப்பன்ஹேகன், ரோம் ஆகிய நகரங்களில் உள்ள விளையாட்டரங்கங்களுக்குள் நுழைய தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான ஆதாரம் அல்லது கிருமித்தொற்றால் பாதிப்பில்லை என்பதற்கான மருத்துவ ஆதாரம் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு அரங்கங்களுக்குள் நுழைவதற்கு முன்பு ரசிகர்கள் கொவிட்-19 மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டுமா என்பது குறித்து கிளாஸ்கோ, மியூனிக், பாக்கு ஆகிய நகரங்கள் இன்னும் தகவல் தெரிவிக்கவில்லை.
போட்டியில் மொத்தம் 24 குழுக்கள் களமிறங்குகின்றன. இங்கிலாந்தின் முதல் சுற்று ஆட்டங்கள் வெம்பிலி விளையாட்டரங்கத்தில் நடைபெறும். இங்கிலாந்து அதன் முதல் ஆட்டத்தில் குரோவேஷியாவை நாளை சந்திக்கிறது.

